நிலக்கரி தட்டுப்பாடு - நடவடிக்கை எடுக்க ராமதாஸ் வலியுறுத்தல்

செவ்வாய், 12 அக்டோபர் 2021 (13:32 IST)
தமிழகத்தில் நிலக்கரி தட்டுப்பாட்டை சமாளிக்க அவசர கால திட்டம் தேவை என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 
 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நிலக்கரி கையிருப்பு குறைவாக இருப்பதாகவும் இதனால் இன்னும் ஒரு சில நாட்களில் மின்வெட்டு ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், தமிழகத்தில் நிலைமையைச் சமாளிக்க அவசர கால திட்டம் தேவை என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் குறிப்பிட்டுள்ளதாவது, 
 
'இந்தியாவில் நிலக்கரி தட்டுப்பாடு அபாயக் கட்டத்தை எட்டிவிட்டதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கிவிட்டன. மின்னுற்பத்தி நிலையங்களில் போதிய அளவு நிலக்கரி இருப்பதாகவும், கவலைப்பட எதுவுமில்லை என்று மத்திய, மாநில அரசுகள் கூறி வந்தாலும் கூட, மத்திய மின்சாரம் மற்றும் நிலக்கரித் துறை அமைச்சர்களை அழைத்து உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தியிருப்பதிலிருந்தே நிலைமையின் தீவிரத்தை உணர்ந்துகொள்ள முடியும். இது மிகவும் கவலையளிக்கும் விஷயமாகும்.
 
தமிழகத்தில் 2.40 லட்சம் டன் நிலக்கரி கையிருப்பு உள்ளதாகவும், ஒரு நாளைக்கு 56 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படும் நிலையில், 60,000 டன் நிலக்கரி வந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ள மின்சாரத்துறை அமைச்சர், அதனால் தமிழகத்தில் ஒரு விநாடி கூட மின்வெட்டு ஏற்பட வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
 
அமைச்சரின் விளக்கம் நம்பிக்கையளிக்கும் வகையில் இருந்தாலும் கூட, கள நிலைமையைக் கருத்தில் கொண்டு, நிலக்கரி தட்டுப்பாடோ, அதனால் மின்சாரத் தட்டுப்பாடோ ஏற்பட்டால், அதைச் சமாளிப்பதற்கான திட்டத்தை வகுத்து தமிழக அரசு தயாராக இருக்க வேண்டும்.
 
எனவே, கள நிலைமையை உணர்ந்துகொண்டு, மின்பற்றாக்குறை ஏற்பட்டால் அதைச் சமாளிப்பதற்கான அவசர காலத் திட்டத்தைத் தயாரித்து தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். அதன் மூலம், தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படாமல் இருப்பதை தமிழக அரசும், தமிழ்நாடு மின்வாரியமும் உறுதி செய்ய வேண்டும்'.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்