இப்போது மட்டும் எப்படி நேர்மையாக தேர்தல் நடக்கும்? : ராமதாஸ் விளாசல்
செவ்வாய், 18 அக்டோபர் 2016 (12:52 IST)
தஞ்சாவூர், அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 19ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஆனால் இந்த முறையும் தேர்தல் அங்கு நியாயமாக நடக்க வாய்ப்பில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் ஒத்திவைக்கப்பட்ட தஞ்சாவூர், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி தேர்தல்களும், திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலும் அடுத்த மாதம் 19-ஆம் தேதி நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் தேர்தலை நடத்தி அரசியலமைப்பு சட்டக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்ற ஆணையத்தின் நோக்கம் சரியானது தான் என்ற போதிலும், இம்முறையாவது தேர்தல் நியாயமாக நடக்குமா? என்ற வினாவும் எழுகிறது.
தமிழக சட்டப்பேரவைக்கு கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலின்போதே அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் இரு தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு முதலில் மே 23-ஆம் தேதிக்கும், பின்னர் ஜூன் 13-ஆம் தேதிக்கும், அதைத் தொடர்ந்து மறுதேதி குறிப்பிடப்படாமலும் ஒத்திவைக்கப்பட்டன. இதற்கான காரணம் தமிழக மக்கள் அனைவருக்கும் தெரிந்தது தான். இந்திய வரலாற்றிலேயே வாக்காளர்களுக்கு பணம், பரிசுகள், மது ஆகியவற்றை வழங்கியதற்காக 3 முறை தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட பெருமை இந்த இரு தொகுதிகளுக்கே உண்டு. அவற்றுக்குத் தான் ஆணையம் இப்போது தேர்தல் அறிவித்துள்ளது.
தஞ்சாவூர், அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டதற்காக தேர்தல் ஆணையம் கூறிய காரணங்கள் அதிர்ச்சியளிப்பவை; ஜனநாயகத்தை இப்படியெல்லாம் படுகொலை செய்ய முடியுமா? என்ற வினாவை எழுப்பக்கூடியவை. தேர்தல் ஆணையம் கூறிய அக்காரணங்களை அறிந்து கொண்டால் தான் இரு தேர்தல்களிலும் நடந்த மோசடிகள், முறைகேடுகள் ஆகியவற்றின் முழு பரிமாணத்தையும் உணர்ந்து கொள்ள முடியும். அவற்றில் சிலவற்றை மட்டும் பட்டியலிடுகிறேன்.
* அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக நிர்வாகி அன்புநாதன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.4.77 கோடி பணமும், ரூ.1.30 கோடிக்கு வேட்டி&சேலைகள் வாங்கப்பட்டதற்கான குறிப்புகளும் பறிமுதல் செய்யப்பட்டன. திமுக வேட்பாளர் கே.சி.பழனிச்சாமி மற்றும் அவரது மகன் சிவராமனின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.1.98கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அத்துடன் இந்த தொகுதியில் மட்டும் வாக்காளர்களுக்கு வழங்கப்படவிருந்த 1525 லிட்டர் மதுவும் சிக்கியது.
* தஞ்சாவூரில் உள்ள முத்து லாட்ஜில் அதிமுக வேட்பாளர் ரங்கசாமி சார்பில் வாக்காளர்களுக்கு வழங்கப்படுவதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ.15 லட்சம் உட்பட மொத்தம் 25.48 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. 13 வட்டங்களில் உள்ள வாக்காளர்களுக்கு தலா ரூ.500 வீதம் ரூ.1.40 கோடி பணம் கொடுக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் பிடிபட்டுள்ளன. அந்தவகையில் மொத்தமுள்ள 51 வட்டங்களிலும் ரூ.6 கோடி வழங்கப்பட்டிருக்கலாம் என்ற முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது.
* அரவக்குறிச்சி தொகுதியில் முதல்கட்டமாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட பிறகும் வாக்காளர்களுக்கு பணம் தரப்பட்டது. மே 17ஆம் தேதி இரவு நடத்தப்பட்ட சோதனையில் ரூ.5.72 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அரவக்குறிச்சியில் ஓர் ஓட்டுக்கு ரூ.5000 வரை வழங்கப்பட்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. ஓட்டுக்கு பணம் வேண்டாம் என்று தமது பெற்றோர் கூறியபிறகும் கட்டாயப்படுத்தி பணம் தந்ததாக அமெரிக்காவிலிருந்து ஒரு பொறியாளர் புகார் செய்துள்ளார்.
* இரு தொகுதிகளிலும் நியாயமான, சுதந்திரமான தேர்தலை நடத்துவதற்கான சூழலை, ஓட்டுக்கு பணம் தரப்பட்டது தான் சீரழித்தது. குறிப்பாக அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, திமுக வேட்பாளர் கே.சி.பழனிச்சாமி ஆகிய இருவருமே பணபலம் மிக்கவராக இருப்பதால் அத்தொகுதியில் ஆணையத்தின் கண்காணிப்பையும் மீறி பணம் விளையாடியது.
மேற்கூறிய குற்றச்சாற்றுகள் அனைத்தையும் கடந்த 27.05.2016 அன்று வெளியிட்ட அறிவிக்கையில் தேர்தல் ஆணையமே கூறியிருக்கிறது. அதுமட்டுமின்றி, இந்த இரு தொகுதிகளிலும் தற்காலிகமாக தேர்தலை ஒத்திவைப்பதால், களச்சூழலில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்றும், காலப்போக்கில் தேர்தல் நடத்துவதற்கான சூழல் ஏற்பட்ட பிறகு தேர்தல் நடத்தப்படும் என்றும் ஆணையம் கூறியிருந்தது. இத்தகைய நிலையில், இப்போது இரு தொகுதிகளிலும் தேர்தலை நடத்துவதற்கான சூழல் நிலவுகிறது என்ற முடிவுக்கு ஆணையம் எந்த அடிப்படையில் வந்தது? என்பது தான் மில்லியன் டாலர் வினாவாகும்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் அதிமுக ரூ.10,000 கோடியும், திமுக ரூ.6000 கோடியும் வாரி இறைத்து தான் வெற்றி பெற்றன. தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளிலும் அவை பணத்தை வெள்ளமாக பாயவிட்டன. இப்போதும் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகள் மட்டுமின்றி, இடைத்தேர்தல் நடைபெறும் திருப்பரங்குன்றத்திலும் பணத்தை முதலீடு செய்து வாக்குகளை அறுவடை செய்ய அக்கட்சிகள் தயாராக உள்ளன. 3 தொகுதி தேர்தல் நியாயமாக நடத்த ஒத்துழைப்போம்; ஓட்டுக்கு பணம் தரமாட்டோம் என்று தேர்தல் ஆணையத்திடமோ அல்லது இதுதொடர்பான வழக்கு நடைபெற்று வரும் சென்னை உயர்நீதிமன்றத்திலோ இரு கட்சிகளும் வாக்குறுதி அளிக்கவில்லை. இத்தகைய சூழலில் இந்த தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடக்கும் என நம்புவது மூடத்தனமே!
வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக அரவக்குறிச்சி தொகுதியில் 58 வழக்குகளும், தஞ்சாவூரில் பத்துக்கும் மேற்பட்ட வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. இதில் சம்பந்தப்பட்டவர்கள் எவரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை. அரவக்குறிச்சி அன்புநாதன் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் தொடர்பாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவற்றுக்கெல்லாம் முடிவு ஏற்படாத நிலையில், இரு தொகுதிகளுக்கும் தேர்தல் தேதியை ஆணையம் அறிவித்திருப்பது இன்னொரு ஜனநாயக படுகொலை நடப்பதற்கும், மேலும் ஒரு முறை பணநாயகம் வெற்றி பெறவும் தான் வழிவகுக்கும் என்பது உறுதி.
ஒருவேளை இந்த தேர்தல்களை நியாயமாக நடத்த வேண்டும் என்பது தான் தேர்தல் ஆணையத்தின் உண்மையான நோக்கமாக இருக்குமானால், அதை உறுதி செய்வதற்காக...
1) தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் ஓட்டுக்கு பணம் கொடுத்த அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.
2) இரு தொகுதிகளிலும் 10 வாக்குச்சாவடிக்கு ஒரு தேர்தல் பார்வையாளரையும், ஒரு கம்பெனி மத்திய துணை இராணுவப் படையையும் 26-ஆம் தேதி முதல் பணியில் ஈடுபடுத்த வேண்டும்.
3) தஞ்சாவூர், கரூர் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களை தேர்தல் அணியிலிருந்து விலக்கி வைக்க வேண்டும். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தலைமை தேர்தல் அதிகாரியாக வெளிமாநிலத்தவரை நியமிக்க வேண்டும்.
4) வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டால் உடனடியாக தேர்தல் ஒத்திவைக்கப்படும் அல்லது ரத்து செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரிக்க வேண்டும்.
இவை சட்டப்படியோ, நடைமுறைப்படியோ சாத்தியமில்லை என்று தேர்தல் ஆணையம் கூறினால், இவற்றை சாத்தியமாக்குவதற்கான தேர்தல் சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். அதுவரை தஞ்சாவூர், அரவக்குறிச்சி உள்ளிட்ட 3 தொகுதி தேர்தல்களை காலவரையின்றி ஒத்திவைக்க வேண்டும்.