ஆறு மாதத்தில் தேர்தல் வந்தாலும் சந்திப்பேன் - ரஜினி அதிரடி

Webdunia
புதன், 17 ஜனவரி 2018 (17:14 IST)
இன்னும் ஆறு மாதத்தில் தேர்தல் வந்தாலும் நான் சந்திப்பேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

 
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ள விவகாரம், தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தான் ஆன்மீக அரசியலை முன்னெடுக்கப்போவதாகவும், தனிக்கட்சி தொடங்கி  வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார். 
 
ஆனால், தற்போதுள்ள ஆட்சி தொடர்ந்தால் 2021ம் ஆண்டுதான் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும். எனவே, ரஜினிகாந்த் அதுவரை அரசியலில் தாக்குப்பிடிப்பாரா என்ற கேள்வியை  பலரும் எழுப்பி வருகின்றனர்.
 
இது ஒரு புறம் இருக்க, வரும் பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி முதல் தனது சொந்த ஊரான ராமநாதபுரத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கவுள்ளதாகவும், அன்றைய தினம் தனது அரசியல் கட்சியின் பெயர் மற்றும் கொள்கைகளை அறிவிக்கவுள்ளதாகவும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில், இன்று போயஸ்கார்டன் வீட்டிலிருந்து வெளியே வந்த ரஜினியிடம் “ கமல்ஹாசனுடன் இணைந்து செயல்படுவீர்களா?” என ஒரு நிருபர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ரஜினி ‘அதை காலம்தாம் முடிவு செய்ய வேண்டும்’ என தெரிவித்தார். அதன் பின், இன்னும் 6 மாதத்தில் தேர்தல் வந்தால் உங்கள் நிலைப்பாடு என்ன? என ஒரு நிருபர் கேள்வி எழுப்பினார். அதற்கு “ கண்டிப்பாக தேர்தலை சந்திப்பேன்” என தெரிவித்தார்.
 
இதன் மூலம், எப்போது தேர்தல் வந்தாலும், தேர்தலை சந்திக்க தான் தயாராக இருப்பதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்