வெயிலும் அதிகரிக்கும், மழையும் பெய்யும்! தமிழக வானிலை நிலவரம்..!

Mahendran

புதன், 25 செப்டம்பர் 2024 (15:15 IST)
தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களில் வெயிலும் அதிகரிக்கும், சில இடங்களில் மழையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் பரவலாக கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்தாலும், பகல் நேரத்தில் அதிகபட்ச வெப்பம் பதிவாகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் வெயில் அதிகரிக்கும் என்றும் அதே சமயம் மிதமான மழை பெய்யவும் வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில், இன்றும் நாளையும் அதிகபட்ச வெப்பநிலை சில இடங்களில் பதிவாகும் என்றும், பல இடங்களில் இரண்டு முதல் நான்கு டிகிரி செல்சியஸ் அளவிற்கு மேலாக வெப்பம் பதிவாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை குறித்து பார்க்கும்போது, அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதி மற்றும் குமரி கடல் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீச வாய்ப்பு இருப்பதால், இப்பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்