ஒரு இடைத்தேர்தல் வந்தால் ஆளும் கட்சியும் அமைச்சர்களும் காட்டும் வேகத்தை நிவாரண பணிகளில் காட்டாதது ஏன் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இருந்தாலும், அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா அவ்வப்போது தைரியமாக சில கருத்துக்களை முன்வைத்து வருகிறார்.
அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு இடைத்தேர்தல் வந்தால் ஆளும் தரப்பு 20 பூத்திற்கு ஒரு அமைச்சர், எம்.பி. என்று பொறுப்பாளர்களை நியமனம் செய்து பம்பரம் போல் களப்பணியை மேற்கொள்கிறது.
தேர்தல் வெற்றிக்காக அவர்கள் காட்டும் ஆர்வத்தை பெரும் துயரில் மக்கள் சிக்கி உள்ள வேளையில் அடிப்படை தேவைகளை தீர்க்கும் பணிகள் கூட ஏன் காட்டவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒவ்வொரு முறையும் இயற்கை சீற்றத்தால் மக்கள் பாதிக்கப்படுவதும், அதற்கு காரணங்களை மட்டுமே அரசு கூறி வருவது வாடிக்கையாக உள்ளது என்றும் அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கை திமுக கூட்டணி கட்சிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.