மக்களவை தேர்தல் நாளையோடு முடிவடைய உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரங்களை முடித்த பிரதமர் மோடி நேற்று மாலை தமிழ்நாட்டின் கன்னியாக்குமரியை வந்தடைந்தார். அங்கு கடலுக்கு நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் நேற்று தொடங்கி நாளை பிற்பகல் வரை 3 நாட்களுக்கு தீவிர தியானம் மேற்கொள்கிறார். நேற்று முதலாக அவர் தியானம் செய்யும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.
இந்நிலையில் கடந்த 2 மணி நேரம் முன்பாக பிரதமர் மோடியின் எக்ஸ் தளத்தில் ரேமல் புயல் குறித்த பதிவு வெளியாகியுள்ளது. அதில் “துரதிருஷ்டவசமாக, அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், திரிபுரா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் ரெமல் புயலுக்குப் பிறகு இயற்கை பேரழிவுகளைச் சந்தித்துள்ளன. எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அங்கு பாதிக்கப்பட்ட அனைவருடனும் உள்ளன. நிலவும் சூழ்நிலையை ஆய்வு செய்து மாநிலங்களுக்கு தேவையான அனைத்து ஆதரவையும் செய்ய மத்திய அரசு உறுதியளித்துள்ளது. மற்றும் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அதிகாரிகள் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பதிவில் கமெண்ட் செய்து வரும் பலரும் நேற்று மாலையே தியானத்தில் ஆழ்ந்துவிட்ட பிரதமர் மோடி 2 மணி நேரம் முன்னதாக புயல் பாதிப்பை கேட்டறிந்தது எப்படி? பதிவிட்டது எப்படி? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் மணிப்பூர் கலவரத்தின்போது அதுகுறித்து பிரதமர் மோடி பேசாமல் இருந்ததாகவும், தற்போது புயலுக்காவது மணிப்பூரின் பெயரை குறிப்பிட்டுள்ளார் என்றும் சிலர் விமர்சித்து வருகின்றனர். பிரதமர் மோடி தியானத்தில் உள்ள சமயத்தில் வெளியாகியுள்ள இந்த பதிவு வைரலாகியுள்ளது.
இதுகுறித்து பாஜகவினர் சிலர் கூறும்போது, “பிரபலங்களின் சமூக வலைதள கணக்குகளை நேரடியாக அவர்கள் பதிவிடுவது இல்லை. அதற்கென சிலர் பணிபுரிகின்றனர். பிரதமர் மோடி நேற்று தியானத்திற்கு செல்வதற்கு முன்னரே புயல் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்திருக்கலாம். அதை தாமதமாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கலாம்” என கருத்து தெரிவித்துள்ளனர்.