பல்லாவரம் மேம்பாலத்தில் இன்று காலை ஒரு தனியார் கல்லூரி பேருந்து, இருசக்கர வாகனம் ஒன்று குறுக்கே வந்ததால் மேம்பால தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தடுப்புகள் சேதமடைந்ததால், பல்லாவரத்தில் இருந்து விமான நிலையம் செல்லும் சாலை மாற்று பாதையாக மாற்றப்பட்டது. இதன் காரணமாக, அப்பகுதியில் சுமார் 3 கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
விமான நிலையம் செல்லும் வழியில் ஏற்பட்ட இந்தத் தடையால், பல பயணிகள் சரியான நேரத்திற்கு விமான நிலையம் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். இதையடுத்து பயணிகளின் கோரிக்கையை ஏற்று, கோலாலம்பூர், மஸ்கட், கொழும்பு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட விமானங்கள் 30 நிமிடங்கள் வரை தாமதமாகப் புறப்பட்டு சென்றன.
தற்போது பல்லாவரம் மேம்பாலத்தில் போக்குவரத்து சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் உதயா என்பவர் மதுபோதையில் இருந்தது கண்டறியப்பட்டதால், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.