நாடு முழுவதும் ஹிந்தி தினம் கொண்டாடப்பட்ட நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, “நாட்டில் அனைவரும், தங்கள் தாய் மொழியை கற்பது போல ஹிந்தி மொழியையும் கற்க வேண்டும். ஹிந்தி தான் இந்தியாவை உலகம் முழுவதும் அடையாளப்படுத்தும் மொழி” என கூறினார். இதற்கு தமிழகத்தைச் சேர்ந்த பல அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவுத்து வந்தனர்.
தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா, குஜராத், வங்காளம், ஆந்திரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் #StopHindiImposition என்ற ஹிந்தி எதிர்ப்பு ஹேஷ்டேக் டிவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டாகியது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜகவைச் சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன் “மோடி சம்ஸ்கிருதத்தை விட தமிழ் பழமையான மொழி என புகழ்ந்துள்ளார். ஆனால் அதை தமிழர்கள் கொண்டாடவில்லை, தமிழர்கள் நன்றி மறந்தவர்கள், தமிழர்களுக்கு கொண்டாடத் தெரியாது” என ஆவேசமாக பேசியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கு முன் அமித் ஷாவின் ஹிந்தி குறித்த கருத்தை ஆதரிக்கும் வகையில், “மனிதர்களுக்கு ஆறு அறிவு இருக்கிறது, ஆதலால் ஆறு மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டும் என பொன்.ராதாகிருஷ்ணன் கூறியது குறிப்பிடத்தக்கது.