ரவுடி பினுவை சுட்டுப் பிடிக்க உத்தரவு - கேரளாவிற்கு தப்பி ஓட்டம்?.

Webdunia
வெள்ளி, 9 பிப்ரவரி 2018 (10:25 IST)
பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தில் போலீசாரிடமிருந்து தப்பி சென்ற பிரபல ரவுடி பினுவை சுட்டுப் பிடிக்க உயர் போலீசார் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

 
கடந்த 6ம் தேதி இரவு சென்னை பூந்தமல்லை அருகே உள்ள ஒரு லாரி செட்டில் போலீசாரால் தேடப்பட்ட பிரபல ரவுடி பினுவின் பிறந்த நாள் விழாவில் 71 ரவுடிகளை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். ஆனால், பினு தப்பி சென்றுவிட்டார். அவர் மீது 3 கொலை மற்றும் ஆள்கடத்தல், கட்டப் பஞ்சாயத்து, மிரட்டிப் பணம் பறித்தல் உள்ளிட்ட வழக்குகளும் நிலுவையில் இருக்கிறது.  
 
சென்னை சூளைமேட்டை சேர்ந்த பினு, உடல்நலக் கோளாறு காரணமாக தனது சொந்த ஊரான கேராளவிற்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். அதன்பின், அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் என்கிற ரவுடி சூளைமேடு பகுதியில் கட்டப்பஞ்சாயத்து, ஆள் கடத்தல், கொலை உள்ளிட்ட சம்பவங்களை நிகழ்த்தி வந்தார். இதனால் அவரின் வளர்ச்சி அதிகரித்த நிலையில்தான், ரவுடி பினு மீண்டும் சென்னை வந்துள்ளார்.  
 
எனவே, மீண்டும் தனது தொழில் இறங்கி முதலிடத்திற்கு வரவேண்டும் என திட்டமிட்டிருந்த பினு, அதற்கு இடையூறாக இருக்கும் ராதாகிருஷ்ணன் மற்றும் மற்றொரு ரவுடியை இந்த பிறந்த நாள் விழாவிற்கு வரவழைத்து கொலை செய்ய திட்டமிட்டிருந்தார். ஆனால், இதை முன்பே அறிந்த அவர்கள் இந்த விழாவில் கலந்து கொள்ளாமல் தப்பிவிட்டனர் என கைதான ரவுடிகளிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. 
 
அதேபோல், அங்கிருந்து தப்பிய ரவுடி பினு தனது சொந்த மாநிலமான கேரளாவிற்கு தப்பி சென்றிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே, தனிப்படையினர் கேரளா விரைந்துள்ளது. மேலும், தப்பி சென்ற 25க்கும் மேற்பட்ட ரவுடிகள் வேலுர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதால், மற்றொரு தனிப்படையினர் அந்த மாவட்டங்களும் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
 
பினுவை சேர்த்து தப்பி சென்ற மற்ற ரவுடிகள் அனைவரும் தங்களை பாதுகாக்க கொலையும் செய்வார்கள் என்பதால், தேவைப்பட்டால் அவர்கள் சுட்டுப்பிடிக்கவும் தனிப்படையினருக்கு உயர் போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்