கந்துவட்டி புகார் தொடர்பாக, வழக்குப்பதிவு செய்யாமல் இருதரப்பினரையும் அழைத்து சமரசம் செய்ய முயற்சிப்பது 'கட்டப் பஞ்சாயத்து' நடத்துவதற்கு சமம் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி புகழேந்தி தலைமையிலான அமர்வு கண்டித்துள்ளது.
மதுரையை சேர்ந்த சோமசுந்தரம் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கடனை வட்டியுடன் திருப்பி செலுத்திய பிறகும் கூடுதல் வட்டி கேட்டு துன்புறுத்துவதாக குற்றம் சாட்டியிருந்தார். மேலும், உரிய ஆதாரங்களுடன் புகார் அளித்தும் தல்லாகுளம் காவல்துறை வழக்கு பதியவில்லை என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை விசாரித்த நீதிபதிகள், புகார் மீது வழக்குப் பதிவு செய்த பிறகே விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர். மேலும், வெளிப்படையான குற்றங்கள் தொடர்பான புகார்களுக்கு உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும், சில வழக்குகளில் வழக்குப்பதிவு செய்வதற்கு முன் விசாரணை தேவைப்பட்டால் துணை கண்காணிப்பாளரிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.