பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு லஞ்சம் வாங்கிக்கொண்டு சிறப்பு சலுகைகள் அளித்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருட சிறைத்தண்டனை பெற்று, தற்போது பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிற்கு, தனி சமையலறை உட்பட பல வசதிகளை சிறைத்துறை டிஜிபி சத்தியநாரயணா செய்து கொடுத்துள்ளார் என கூறப்படுகிறது.
இதற்காக 2 கோடி ரூபாய் வரை பணம் கை மாறியுள்ளது என சிறைத்துறை டிஐஜி ரூபா புகார் தெரிவித்து அது தொடர்பான அறிக்கையை அவர் கர்நாடக மாநில டிஜிபி தத்தாவுக்கு அனுப்பியுள்ளார். இந்த விவகாரம் தமிழகம் மற்றும் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், டிஐஜி ரூபாவின் இந்த குற்றச்சாட்டை டிஜிபி சத்தியநாராயணா முற்றிலுமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறிய போது, சிறையில் மொத்தமாக சமைக்கப்படும் உணவில் சசிகலாவுக்கு விஷத்தை கலந்து வழங்கி விட வாய்ப்பிருப்பதால், சிறை உணவையே அவருக்குத் தனியாக தயாரித்து வழங்கினோம்.
பாதுகாப்புக்காகவே இதை செய்தோம். நீதிமன்றம் காட்டிய வழியை நாங்கள் பின்பற்றினோம். ரூபா ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளதால் அவரிடம் விளக்கம் கேட்டு மெமோ அனுப்பியுள்ளேன் எனத் தெரிவித்தார்.