ஈஷாவிடம் இருந்து மகனை மீட்டுத் தாருங்கள்’ : தாய் கண்ணீர்

செவ்வாய், 9 ஆகஸ்ட் 2016 (12:06 IST)
ஈஷா மையத்தில் இருந்து தனது மகனை மீட்டுத்தர வேண்டும் எனக்கோரி திங்களன்று துத்துக்குடியை சேர்ந்த தாய் ஒருவர் கண்ணீருடன் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார்.
 

 
கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் பிரபல ஆன்மீகவாதியான ஜக்கி வாசுதேவ் நடத்தும் ஈஷா யோகா மையம் இயங்கி வருகின்றது. ஈஷா யோகா மையத்தில் திருமணமாகாத தனது இரு மகள்கள் கட்டாயப்படுத்தி சன்னியாசிகளாக ஆக்கப்பட்டிருப்பதாக வேளாண்மைக் கல்லூரியின் ஓய்வுபெற்ற பேராசிரியர் புகார் அளித்திருந்தார்.
 
தனது இருமகள்களை கட்டாயப்படுத்தி மொட்டையடித்து துறவறம் மேற்கொள்ள வைத்திருப்பதாகவும், அங்குள்ளவர்களுக்கு போதை வஸ்துகள் உட்கொள்ளவைப்பதும், மூளைச்சலவை செய்து சொத்துக்களை எழுதி வாங்குவதாகவும் பரபரப்பு குற்றம்சாட்டி இருந்தார்.
 
இதனையடுத்து, ஈஷா யோகா மையத்தில் பொள்ளாச்சி பகுதியின் ஒருங்கிணைப்பாளராக 8 ஆண்டுகள் பணியாற்றிய செந்தில் என்பவர், அந்த மையத்தின் மீது பல திடுக்கிடும் புகார்களை தெரிவித்துள்ளார். யோகா மையத்தினர் கூறுவது முற்றிலும் பொய்யானது எனவும் தெரிவித்து இருந்தார்.
 
இந்நிலையில், மதுரை திருப்பாலையம் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற உளவுத்துறை காவலர் மகேந்திரன், சேவா என்கிற பெயரில் குழந்தைகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கி குழந்தைகளை மனரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவதாகவும், அதனால் தனது மகன்கள் மனநல பாதிப்புக்கு உள்ளானதாகவும் கூறியிருந்தார்.
 
இந்நிலையில் தூத்துக்குடியை சேர்ந்த தமிழ்ச்செல்வி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் ஹரிகரனை சந்தித்து மனு ஒன்றினை அளித்தனர். இதில் ஈஷா மையத்தில் சிக்கியுள்ள தனது மகனை மீட்டுத் தரவேண்டும் என தெரிவித்திருந்தார்
 
இதுகுறித்து ஈஷாவில் மகனை பறிகொடுத்த தமிழ்ச்செல்வி கூறுகையில், "சிங்கப்பூரில் பணிபுரிந்த தனது மகன் ரமேஷ் என்பவர் அங்கு நடைபெற்ற ஈஷாவின் யோகா மையத்திற்கு பயிற்சிக்கு சென்றார்.
 
பின்னர் அங்கிருந்து யாரிடமும் சொல்லாமல் கோவையில் உள்ள ஈஷா மையத்திற்கு வந்துவிட்டதாக தெரிவித்தார். இங்கு தனது மகனை மூளைச்சலவை செய்துள்ளதுடன் ஓரு விதமான மயக்க மருந்தும் கொடுத்துள்ளனர். தனது மகனை தனியாக பார்த்து பேச கூட ஈஷா யோகா மையத்தினர் விடுவதில்லை.
 
குறிப்பாக, ரமேசின் தாத்தா மற்றும் பாட்டி இறந்துபோனபோது கூட வீட்டுக்கு அனுப்பவில்லை என்று குற்றம் சாட்டிய அவர், தற்போது தனது கணவர் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும் அவரை சந்திக்க கூட விடாமல் ஈஷா நிர்வாகத்தினர் மூளைச்சலவை செய்து தங்க வைத்து இருப்பதாகவும் தமிழ்செல்வி தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்