தே.மு.தி.க.வில் பதவி வேண்டாம் என்று மாவட்ட செயலாளர்கள் விஜயகாந்திற்கு கடிதம் எழுதி உள்ளனர்.
தே.மு.தி.க.வில் மாவட்ட செயலாளர்களுக்கு அப்படி என்ன நெருக்கடி? பல பேர் தங்கள் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து விலகுகின்றனர். சமீபத்தில் திருநெல்வேலி மாவட்ட செயலாளர் அய்யப்பெருமாள் உடல்நலம் கருதியும், திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் மணிகண்டன் குடும்ப சூழ்நிலை காரணமாகவும் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், கிருஷ்ணகிரி, திருச்சி, பெரம்பலூர் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பல நிர்வாகிகள் விஜயகாந்திற்கு கடிதம் கொடுத்துள்ளனர். அதில், “தங்களின் ரசிகர்களாக 25 ஆண்டுகளாக இருந்து பின்னர் கட்சியில் சேர்ந்து தங்களோடு இணைந்து பணியாற்றி வருகிறோம். குடும்ப சூழ்நிலை காரணமாக நாங்கள் வகித்து வரும் பொறுப்பில் இருந்து விடுவிக்க கேட்கிறோம். பொறுப்பில் இருந்து விடுவித்தாலும் கட்சியில் இருந்து தொடர்ந்து பணியாற்றுவோம்” என்று குறிப்பிட்டுள்ளனர். அவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் விஜயகாந்த் ஈடுபட்டுள்ளார்.
மாவட்ட செயலாளர்கள் மட்டுமின்றி பலர் கட்சியின் முக்கிய நிர்வாக பொறுப்புகளில் இருந்தவர்களும் விலகி உள்ளனர். கட்சிக்கு விரோதமாக செயல்பட்ட ஒரு சில நிர்வாகிகளையும் கட்சி தலைவர் விஜயகாந்த் நீக்கி உள்ளார். சட்டசபை தேர்தல் முடிவுக்கு பிறகு தே.மு.தி.க.வில் இருந்து பல மாவட்ட செயலாளர்கள் விலகி அ.தி.மு.க., தி.மு.க.வில் இணைந்துள்ளனர்.