நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.. 2 பேர் படுகாயம்.!

Mahendran

சனி, 21 டிசம்பர் 2024 (11:41 IST)
நாகை மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நிலையில், திடீரென கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் இரண்டு மீனவர்கள் படுகாயம் அடைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென இலங்கையை சேர்ந்த கடற்கொள்ளையர்கள் ஆறு பேர் அவர்களது படகுகள் ஏறி, மீனவர்களை இரும்புக் கம்பியால் தாக்கியும், அரிவாளால் வெட்டியும் உள்ளனர். இதில் இரண்டு மீனவர்களுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து, கடற்கொள்ளையர்கள் மீனவர்களின் படகில் இருந்த 300 கிலோ வலைகள், ஜிபிஎஸ் கருவி, செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு சென்றதாக தெரிகிறது.

இந்த நிலையில், இன்று காலை கோடியக்கரைக்கு திரும்பிய மீனவர்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். காயம் அடைந்த இரண்டு பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோர காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்