தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, கர்நாடகா மாநிலத்தில், தமிழர்கள் மீது தாக்குதல் நடந்து வருகிறது.
மேலும், கன்னட திரை உலகத்தினர் போராட்டத்தை பற்றி கர்நாடகத்தில் வசிக்கும் சுரேஷ்குமார் என்ற தமிழர் சமூக வலைதளங்களில் பதிவிட்டதால், அவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில், தமிழர்கள் மீது, கன்னடர்கள் தாக்குதலில் ஈடுப்படுவதை கண்டித்து, சென்னை மயிலாப்பூரில் உள்ள கன்னடருக்கு சொந்தமான உட்லேண்ட்ஸ் உணவகத்தின் மீது சிலர் பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மேலும், அவர்கள், உணவகத்தினுள் சென்று, கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். பிறகு, ”கர்நாடகாவில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் தமிழகத்தில் உள்ள கன்னட நிறுவனங்கள் மீது தாக்குதல் தொடரும்” என்று எழுதப்பட்ட காகிதத்தை வீசிவிட்டு அவர்கள் சென்றுவிட்டனர்.
இதனால் அப்பகுதி சற்று பதற்றமாக இருக்கிறது. இதனையடுத்து, சென்னை தியாகராயர் நகர் அபிபுல்லா சாலையில் உள்ள கன்னட பள்ளி, அயனாவரத்தில் உள்ள கன்னட பள்ளி, கன்னட கவிஞர் சர்வக்ஞர் சிலை உள்ளிட்டவற்றுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.