மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் ஆகிய நாட்களில் பக்தர்கள் அதிகமாக சென்று சுவாமி வழிபாடு செய்வது தெரிந்தது.
இந்த நிலையில், கனமழை காரணமாக கடந்த மாதம் பௌர்ணமி வழிபாட்டிற்கு பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஐப்பசி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசை வழிபாட்டிற்கு சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.
நாளை முதல், அதாவது அக்டோபர் 29 முதல் நவம்பர் 1 வரை நான்கு நாட்கள் பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் தொடர் மழை பெய்ததன் காரணமாக ஓடைகளில் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் பக்தர்கள் கவனமாக மலையேற வேண்டும் என்றும், அனுமதிக்கப்பட்ட நாளில் மீண்டும் மழை பெய்தால் மலையேற தடை விதிக்கப்படும் என்றும் வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.