திமுக-வுக்கு, நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்- எடப்பாடி பழனிசாமி

செவ்வாய், 31 அக்டோபர் 2023 (12:57 IST)
திமுக-வுக்கு, வருகின்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன்  சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளதாவது:

''அரக்கர்கள், அசுரர்கள், கிங்கரர்கள் 
என்று புராணக் கதைகளில் கேள்விப்பட்டிருக்கிறோம்..., நாம் யாரும் அவர்களைக் கண்டதில்லை.. அந்தக் குறையைப் போக்க ஆளும் திமுக-வினர் அவதாரம் எடுத்து, தமிழகத்தை அலங்கோலப்படுத்தி வருவது வேதனையின் உச்சமாகும்.
 
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (30.10.2023), கல்குவாரிகளுக்கான ஒப்பந்தப் புள்ளிகள் பெறப்பட்ட நிகழ்வு நடைபெற்றுள்ளது. போக்குவரத்து மந்திரியின் உதவியாளர் மற்றும் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரின் உதவியாளர் மற்றும் திமுக நிர்வாகிகள் என்ற பெயரில் சுமார் 300 குண்டர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்து கல்குவாரி டெண்டரை தங்களுக்கே தர வேண்டும் என்றும், திமுக-வினரைத் தவிர வேறு யாரிடமும் ஒப்பந்தப் புள்ளி பெறக்கூடாது என்றும் மிரட்டி அராஜகத்தில் ஈடுபட்டதாக, அனைத்து ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் செய்திகள் வந்துள்ளன.
 
திமுக-வினரின் கோரிக்கையை ஏற்க மறுத்த கனிம வளத்துறை உதவி இயக்குநர், அவருடைய உதவியாளர் ஆகிய இருவரும் தாக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.
 
இத்தனை களேபரம் நடந்தும், காவல் துறை உயர் அதிகாரிகளோ, மாவட்ட ஆட்சியரோ சம்பவ இடத்திற்கு விரைந்து வராதது, இவர்களின் கைகள் ஆட்சியின் மேலிட கோமான்களால் கட்டப்பட்டுள்ளதையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
 
சென்னையில் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய நபர் குறித்து வீடியோ வெளியிட்டு பேட்டி கொடுத்த காவல்துறை உயர் அதிகாரியும், பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலினும், பெரம்பலூரில் ஆளுங்கட்சியினர் நடத்திய வன்முறை வெறியாட்டம் குறித்து வீடியோ வெளியிடத் தயாரா?
 
30.10.2023 அன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அராஜகத்தில் ஈடுபட்ட திமுக-வினர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க, காவல் துறைக்கு பொறுப்பு வகிக்கும் விடியா திமுக அரசின் பொம்மை முதலமைச்சரை வலியுறுத்துவதோடு, திமுக-வினர் அதிகார மமதையில் தொடர்ந்து வியாபாரிகள், தொழிலதிபர்கள், அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரை மிரட்டி அராஜகத்தில் ஈடுபடுவது தொடர்கதையாகிவிட்டது. இத்தகைய வன்முறைச் செயல்களுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். அராஜகத்தில் ஈடுபட்டு வருபவர்களைக் கட்டுப்படுத்தத் தவறிய திமுக-வுக்கு, வருகின்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்'' என்று தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்