ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

Mahendran

சனி, 6 ஜூலை 2024 (18:20 IST)
காவல்துறை மற்றும் உளவுத்துறையின் மெத்தனப் போக்கின் காரணமாக பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என சென்னையில் பகுஜன் சமாஜ்வாதி கட்சி மாநில செயலாளர் பார்த்திபன் பேட்டி அளித்துள்ளார்.
 
ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசு தரப்பில் இருந்து இதுவரை எந்தவித பதிலும் வராததால் சாலை மறியலில் ஈடுபட்டு வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
 
மேலும் நாளை (ஜூலை 07) பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் மாயாவதி தமிழ்நாடு வரவுள்ளார் என்றும், எங்களது கோரிக்கையை தமிழ்நாடு அரசு பரிசீலிக்கவில்லை என்றால் மாநிலம் தழுவிய போராட்டத்தை முன்னெடுப்போம் என்றும்  பகுஜன் சமாஜ்வாதி கட்சி மாநில செயலாளர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
 
மேலும் பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என்றும், ஆம்ஸ்ட்ராங்கின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்றும், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும், தற்போது கைது செய்யப்பட்டவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் உண்மையான குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என்றும் பகுஜன் சமாஜ்வாதி கட்சி மாநில செயலாளர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
 
இந்த நிலையில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலை சென்னை, பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்