ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிம் ஓபிஎஸ் அணி, தங்களுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
சென்னை ஆர்.கே.நகர் தேர்தல் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெறவுள்ளதை அடுத்து அரசியல் கட்சிகளின் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளன. குறிப்பாக அதிமுக தினகரன் அணி, ஓபிஎஸ் அணி மற்றும் திமுக ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களுக்காக சூறாவளி பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது
இந்த நிலையில் ஓபிஎஸ் அணியின் வேட்பாளர் மதுசூதனனுக்கு ஆதரவாக நேற்று முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆர்.கே.நகரில் பிரச்சாரம் செய்த போது, நாளை காலை 10 மணிக்கு(இன்று) எங்கள் அணியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். இந்த அறிக்கையில் இதுவரை இந்தியாவில் யாரும் தயாரித்திடாத அளவிற்கு சிறப்பம்சங்கள் இருக்கும் என கூறியிருந்தார்.
அதன்படி தற்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிவரும் மாஃபா பாண்டியராஜன், ஓ.பி.எஸ் அணியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகிறார். மொத்தம் 108 அம்சங்கள் அந்த அறிக்கையில் நிறைந்துள்ளது. முக்கியமாக, ஜெ.வின் மரணத்திற்கு நீதி விசாரணை,போயஸ் கார்டனை ஜெ.வின் நினைவு இல்லமாக மாற்றுவது, ஓ.பி.எஸ் தலைமையில் அதிமுக ஒன்றிணைக்கப்படுவது உள்ளிட்ட பல அறிக்கைகள் அதில் இடம் பெற்றிருக்கிறது.
முக்கியமாக, இந்தியாவில் இதுவரை எந்த கட்சியும், எம்.எல்.ஏவும் அறிவிக்காத நடமாடும் எம்.எல்.ஏ அலுவகம் அமைக்கப்படும் என அவர் கூறினார். இதன் மூலம், தொகுதி மக்கள் தங்கள் குறைகளையும், தேவைகளையும் மொபைல் அலுவலகத்தில் தெரிவிக்கலாம் என அவர் தெரிவித்தார்.
மேலும், எழில் நகர் பகுதியில் சுற்றுலா மையம் அமைக்கப்படும் எனவும், அனைவருக்கும் பட்டா, தடையின்றி மின்சாரம், பாதுகாப்பான குடிநீர், தரமான சாலை வசதி, ஆர்.கே.நகரில் வங்கிகள், ஆரம்ப சுகாதார மையங்களில் போதிய மருத்துவர்கள் செயல்பட நடவடிக்கை, மேலும் 2 உயர் நிலைப்பள்ளி, ஒரு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல அம்சங்கள நிறைந்த அறிக்கையை அவர் வெளியிட்டார்.