பாரதிய ஜனதா கட்சியின் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மீண்டும் வருமாறு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், ஆனால் அவர் அந்த அழைப்பை நிராகரித்ததாகவும் கூறப்படுவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது ஓ. பன்னீர்செல்வம் அவமதிக்கப்பட்டதாக கூறப்பட்டதை அடுத்து, அவர் திடீரென தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இந்த முடிவு, அதிமுக-பாஜக கூட்டணிக்கு தென் மாவட்டங்களில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதப்பட்டது.
இதை தொடர்ந்து, பாஜக நிர்வாகிகள் ஓபிஎஸ்-ஸுடன் பேச்சுவார்த்தை நடத்தியபோதிலும், அவர் மீண்டும் கூட்டணிக்கு வர முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
தற்போது, அவருக்கு மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், ஆனால் "எனது நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்த பிறகுதான் எதையும் தெரிவிக்க முடியும்" என்று கூறி, பேச்சுவார்த்தைக்கு வர ஓபிஎஸ் மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பாஜக நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், பிரதமர் மோடி அவரை நேரடியாக சந்தித்து அழைப்பு விடுத்தால், ஓபிஎஸ் மீண்டும் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.