அதிமுகவின் இரு அணிகளும் இணைவதற்கான பேச்சுவார்த்தை இன்று பிற்பகலில் அதிகாரப்பூர்வமாக நடக்கும் என தகவல்கள் கசிகின்றன. முன்னதாக நேற்று நள்ளிரவே இரு அணிகளை சேர்ந்தவர்களும் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
கட்சியின் நலன் கருதி இரு அணிகளும் இணைய வேண்டும் என அதிமுக அமைச்சர்கள் கூறி வந்தனர். இதனையடுத்து இரு அணிகளும் பேச்சுவார்த்தை நடத்த குழுக்கள் அமைத்தது. ஆனால் தொடர்ந்து இரு அணிகளும் அளித்து வந்த பேட்டிகளால் இந்த பேச்சுவார்த்தை தடைபட்டு நின்றது.
இந்நிலையில் இன்று பிற்பகலில் அதிகாரப்பூவமாக இரு அணிகளுக்கான பேச்சுவார்த்தை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என கூறப்படுகிறது. இரு அணிகளிலும் இருந்து தலா 7 பேர் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது. ஏற்கனவே இரு அணிகளும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான குழுவை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் முன்னதாக நேற்று நள்ளிரவே இரு அணியை சேர்ந்தவர்களும் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் கசிகின்றன. தனியார் ஹோட்டல் ஒன்றில் நடந்த இந்த ரகசிய பேச்சுவார்த்தை நள்ளிரவு 1 மணி வரை நடைபெற்றதாகவும் 5 மணி நேரம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிச்சாமி அணி சார்பில் செங்கோட்டையன் மற்றும் வைத்திலிங்கமும், ஓபிஎஸ் அணி சார்பில் நத்தம் விஸ்வநாதன் மற்றும் முனுசாமியும் இந்த ரகசிய பேச்சுவார்த்தையை நடத்தியதாக கூறப்படுகிறது. நேற்று இரவு தினகரன் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்ட நேரத்தில் தான் இவர்கள் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மேலும் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சூழல் உருவாகியுள்ளது என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.