ஊட்டி – மேட்டுப்பாளையம் ரயில் சேவை இன்றும் ரத்து! – பயணிகள் ஏமாற்றம்!
செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (08:50 IST)
ஊட்டி – மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை இரண்டாவது நாளாக இன்றும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக பயணிகள் மலைரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக குன்னூர், பர்லியாறு மற்றும் அதை சுற்றியுள்ள பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.
இதனால் கல்லாறு ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் பாறைகள் சரிந்து விழுந்ததால் பயணிகளை மலை ரயிலை இயக்க முடியாத சூழல் உருவானது. இதனால் நேற்று ஊட்டி – மேட்டுப்பாளையம் மலைரயில் சேவை நிறுத்தப்பட்டது. பின்னர் பாறைகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்றது.
பாறைகளை அப்புறப்படுத்தும் பணி இன்னமும் முடிவடையாமல் உள்ளதால் இன்றும் மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதேசமயம் ஊட்டி – குன்னூர் இடையே ரயில் சேவை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.