இது சம்மந்தமாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியா முழுவதும் 2022 ஜனவரி 8ஆம் தேதி நிலவரப்படி கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,59,632 என்ற அளவிலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 327 என்ற அளவிலும் இருக்கின்ற நிலையினைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு சில விலக்குகளையும், வழிகாட்டு நெறிமுறைகளையும் மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், அதனை மாநில அரசு ஊழியர்களுக்கும் நடைமுறைப்படுத்த வேண்டிய சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது.
கரோனா மூன்றாவது அலை வேகமாகப் பரவிக் கொண்டிருக்கின்ற , சூழ்நிலையில், மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் விரிவுபடுத்தினால் மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களின் நலம் பாதுகாக்கப்படுவதோடு, அரசு ஊழியர்களை கரோனா தொற்று பாதிப்பது கணிசமாகத் தடுக்கப்படும். மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசும் பின்பற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அரசு ஊழியர்கள் மத்தியில் நிலவுகிறது. எனவே, தமிழ்நாடு முதல்வர் அரசு அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து மத்திய அரசு வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசு ஊழியர்களுக்கும் நீட்டிக்க வழிவகை செய்ய வேண்டும்'' என்று கூறியுள்ளார்.