எந்த தமிழனும் தமிழ்நாட்டை உருவாக்கல.. RSS தேசபக்தர்களை உருவாக்கியது! - மகாராஷ்டிர ஆளுநர் சர்ச்சை பேச்சு!

Prasanth Karthick

ஞாயிறு, 23 மார்ச் 2025 (11:20 IST)

தமிழ்நாட்டை எந்த தமிழனும் உருவாக்கவில்லை என மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

 

தமிழக பாஜக மூத்த தலைவரான சி.பி.ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிராவின் ஆளுநராகவும் இருந்து வருகிறார். சமீபத்தில் சச்சின் நந்தா என்பவர் எழுதிய ”ஹெட்கேவர் வாழ்க்கை வரலாறு” புத்தக வெளியீட்டு விழாவில் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்துக் கொண்டு பேசினார்.

 

அப்போது அவர் “பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்திய துணை கண்டத்தை பேரரசர் அசோகர் ஒன்றிணைத்தார். இந்தியா என்பது கலாச்சார, பண்பாடு ரீதியாக ஒரே நாடாகதான் இருந்தது. அந்நிய படையெடுப்பாளர்களால் இந்தியா பிரித்து ஆளப்பட்டது. சில மாநிலங்களில் இன்னும் பிரிவினைவாத சக்திகள் செயல்பட்டு வருகின்றன. ஆர்.எஸ்.எஸும், ஹெட்கேவரும் தேசபக்தர்களை உருவாக்கினர். தேசத்தை ஒன்றிணைத்தனர்.

 

சமண மதம் தோன்றியபோது தமிழர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் அதை பின்பற்றினர். ஆனால் இன்று 40 ஆயிரம் சமணர்களே எஞ்சியுள்ளனர். பௌத்தமும் தமிழ்நாட்டில் பரவலாக பின்பற்றப்பட்ட மதம். தமிழ்நாடு ஆங்கிலேயர்களால் அரசியல்ரீதியாக உருவாக்கப்பட்டது. எந்த தமிழனும் தமிழ்நாட்டை உருவாக்கவில்லை.

 

வரலாற்றில் பார்த்தால் தமிழ்நாடு சேர, சோழ, பாண்டிய நாடு, கொங்கு நாடு என தனித்தனியாக இருந்தது. நாம் அதை மேலும் பிரித்துக் கொண்டே போனால் ஒரு டவுன் பஸ்ஸில் ஏறுவது போல நீங்கள் சென்றாலும், திரும்பி வந்தால் உங்கள் பாஸ்போர்ட்டை காண்பிக்க வேண்டும். இதுதான் யதார்த்தம்” என பேசியுள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்