Youtube சேனல்களுக்கு கட்டுப்பாடா.? மத்திய அரசுக்கு பறந்த உத்தரவு..! நீதிமன்றம் அதிரடி..!

Senthil Velan

திங்கள், 5 ஆகஸ்ட் 2024 (17:41 IST)
யூடியூப் சேனல்களை முறைப்படுத்த உரிய நடைமுறைகளை வகுக்க கோரிய வழக்கில் 4 வாரங்களில் பதில் அளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்த எந்த நடைமுறையும் இல்லை என கூறி சென்னையை சேர்ந்த பார்த்திபன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.  அதில், குற்ற வழக்குகளில் யூடியூப் சேனல்கள் ஊடக விசாரணை நடத்துவதால் காவல் துறையினரின் புலன் விசாரணை பாதிக்கப்படுகிறது.

யூடியூப் சேனல்கள் பதிவுகளை முறைப்படுத்த எந்த நடைமுறையும் இல்லாததால் பொது அமைதி பாதிக்கப்படுவதால் யூடியூப் சேனல்களை முறைப்படுத்தவும், கட்டுப்படுத்தவும் உரிய நடைமுறைகளை வகுக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி குமரேஷ் பாபு அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, யூடியூப் நிறுவனத்தையும், மத்திய அரசையும் எதிர்மனுதாரராக சேர்க்கவில்லை என்று தமிழக அரசு பிளீடர் எட்வின் பிரபாகர் தெரிவித்தார். 
 
இதையடுத்து இந்த வழக்கில் மத்திய அரசை எதிர் மனுதாரராக சேர்க்கும்படி மனுதாரருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில் இந்த வழக்கு இன்று  மீண்டும் விசாரணைக்கு வந்தது.   

ALSO READ: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு..! 5 பேரை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி.!!

யூடியூப் சேனல்களை முறைப்படுத்த உரிய நடைமுறைகளை வகுப்பது தொடர்பாக மத்திய அரசு 4 வாரங்களில் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்