கஜா 2, கஜா 3 உண்மையா? வானிலை ஆய்வு மையம் விளக்கம்

Webdunia
வியாழன், 22 நவம்பர் 2018 (09:03 IST)
சினிமாவில் பாகம் 2, பாகம் 3 வருவது போன்று கஜா புயல் 2, கஜா புயல் 3 விரைவில் தமிழகத்தை தாக்கவிருப்பதாக ஒருசிலர் சமூக இணையதளங்கள் மூலம் வதந்தி பரப்பி வருகின்றனர். ஆனால் இப்போதைக்கு கஜா 2, கஜா 3 உள்பட எந்த புயலும் இல்லை என்றும், ஆனால் அதே நேரத்தில் அடுத்த சில நாட்களுக்கு தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கஜா புயலுக்கு பின்னரும் டெல்டா மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருவதற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு காரணம் என்றும், இந்த காற்றழுத்த தாழ்வால் தமிழகத்தின் கடலோர மற்றும் உள்மாவட்டங்களில் இன்றும், நாளையும் நல்ல மழை பெய்யும் என்றும், இந்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு இல்லை என்றும், கஜா 2, கஜா 3 போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே கஜா புயலால் பாதிக்கப்பட்டு மீளமுடியாத துயரில் இருக்கும் பொதுமக்களை கஜா 2, கஜா 3, என பயமுறுத்தும் புரளிகளை கிளப்ப வேண்டாம் என்று சமூக வலைத்தள பயனாளிகளை சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்