அதிமுகவில் இது என்ன புது பிரச்சனையா இருக்கு: ஆட்சியை கவிழ்த்துடுவாங்களோ?

வியாழன், 27 ஏப்ரல் 2017 (13:25 IST)
ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக சசிகலா அணி, ஓபிஎஸ் அணியாக பிரிந்தது. தற்போது சசிகலா அணி எடப்பாடி அணியாக மாறி நிற்கிறது. இந்நிலையில் அதிமுகவில் உள்ள தலித் சமுதாய எம்எல்ஏக்கள் ஒன்று சேர்ந்து ஒரு அணியாக செயல்பட உள்ளதாக தகவல்கள் வருகின்றன.


 
 
அதிமுக ஆட்சி தற்போது நடந்து வருவதற்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு 122 எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்துள்ளனர். அதில் 28 எம்எல்ஏக்கள் அதாவது கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கு எம்எல்ஏக்கள் தலித் சமுதாய எம்எல்ஏக்கள். ஆனால் அமைச்சரவையில் வெறும் 3 பேர் தான் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்களாக இருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இதனையடுத்து 28 தலித் எம்எல்ஏக்களும் சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் ரகசிய கூட்டம் ஒன்றை நடத்தி அதில் தமிழக அமைச்சரவையில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பினருக்குப் போதிய பிரதிநிதித்துவம் வழங்கப்படாதது பற்றி விவாதித்ததாக கூறப்படுகிறது.
 
தற்போதையை ஆட்சியை தாங்கி பிடிக்கும் நான்கில் ஒரு தூணாக நான் இருக்கும் போது ஏன் அமைச்சரவையில் போதிய இடம் இல்லை. இரு அணிகள் சேர்ந்து யார் ஆட்சிக்கு வந்தாலும் நம்முடைய ஆதரவு இல்லாமல் ஆட்சி நடத்த முடியாது. நான்கில் ஒரு பங்கு ஆதரவு இருப்பதால் நம்முடைய ஆதரவை வாபஸ் பெற்றாலும் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் பதவி நீக்கம் செய்ய முடியாது என தலித் எம்எல்ஏக்கள் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
 
விரைவிலே தங்கள் கோரிக்கையை அரசிடம் வைக்க உள்ளதாகவும், தங்களுக்கு அமைச்சரவையில் உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் இல்லையென்றால் ஆளுநரை சந்தித்து முறையிடவும் உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
 
அமைச்சரவையில் தங்களுக்கான இடஒதுக்கீடு மற்றும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் ஆட்சியைக் கவிழ்க்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதிமுகவின் எந்த அணி ஆட்சிக்கு வந்தாலும் இவர்களின் ஆதரவு முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்