சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார் குறித்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தகவல் வந்த வண்ணம் உள்ளது. ராம்குமார் பற்றி சில வழக்கறிஞர்கள் பரபரப்பு தகவல்களை கூறி வருகின்றனர். இந்நிலையில் இதுபற்றி நெல்லை டிஐஜி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.
ராம்குமார் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சார்பில் ஜாமீன் வழக்கு தொடர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற வழக்கறிஞர், ராம்குமார் இந்த கொலையை செய்யவில்லை என்று கூறியிருந்தார். அவர் தற்போது அந்த வழக்கிலிருந்து விலகி விட்டார்.
ராம்குமாரை சிறையில் சந்தித்து விட்டு வந்த வழக்கறிஞர் ராமராஜ் “ராம்குமார் ஒரு நாளுக்கு முன்பே கைது செய்யப்பட்டார் என்றும், அவரின் கழுத்தை போலீசாரே அறுத்துவிட்டு, அவர் தற்கொலைக்கு முயன்றார் என்பது போல் நாடகம் ஆடுகின்றனர்” என்று கூறியிருக்கிறார்.
இந்நிலையில் இதுபற்றி நெல்லை சரக காவல்துறை டிஐஜி தினகரன் ஒரு வார இதழுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறிய அவர் “ சுவாதி வழக்கில் ராம்குமார்தான் குற்றவாளி என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. அதேபோல், கைது முயற்சியின் போது, அவர் தற்கொலைக்கு முயற்சி செய்தார் என்பதற்கும் எங்களிடம் உள்ளது. இன்னும் சில நாட்கள் சென்றால், ராம்குமாருக்கு நுங்கம்பாக்கம் ரயில் நிலையமே தெரியாது என்று சொல்வார்கள் போலிருக்கிறது” என்று கூறினார்.
அதேபோல் மற்றொரு காவல் அதிகாரி கூறுகையில் “நாங்கள் கைது செய்ய முயன்ற போது, அவர் தற்கொலைக்கு முயன்றது உண்மை. பொதுவாக ஓரு வழக்கில் ஆஜராகும் வழக்கறிஞர்கள், இப்படி பேசுவது வழக்கமான ஒன்றுதான்” என்று கூறினார்.