நீட் பயிற்சி தொடர்ந்து வழங்கப்படும் - மா.சுப்பிரமணியன் பேட்டி

Webdunia
சனி, 19 ஜூன் 2021 (10:00 IST)
அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்விற்கான பயிற்சி தொடர்ந்து வழங்கப்படும் என அமைச்சர்  மா.சுப்பிரமணியன் பேட்டி. 

 
அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்விற்கான பயிற்சி தொடர்ந்து வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் இன்று  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  
 
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற வேண்டும் என்று திமுக பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் உண்மையை மறைத்து மாணவர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவது யார் என்பது தெரிந்திருந்தும், ஓ.பி.எஸ்., தற்போது ஒரு குழப்ப அறிக்கையை ஏன் வெளியிட்டுள்ளார் என்று தெரியவில்லை. 
 
ஓ.பி.எஸ். அவரது அறிக்கையில் மாணவர்கள் நலன் கருதி தான் கருத்து கூறி இருக்கிறாரா என்பது தெரியவில்லை. நீட் தமிழகத்தில் நுழைந்ததே அதிமுக ஆட்சியில் இருந்த போது தான். மேலும் நீட் தேர்வுக்கு பயிற்சி அளித்ததே அவர்கள் ஆட்சியில் அரசு பள்ளிகளில் அளிக்கப்பட்டது. இந்நிலையில் திமுக ஆட்சியில் தான் முதன்முதலில் நீட்டுக்கு பயிற்சி அளிப்பது போன்று ஓ.பி.எஸ். கருத்து தெரிவித்து இருப்பது வேடிக்கை அளிக்கிறது. 
 
முறையாக நீட் தேர்வில் இருந்து தமிழகம் விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அதேபோல் பிரதமரிடமும் முதல்வர் நேரில் சந்தித்து வலியுறுத்தி உள்ளார். எனவே நிச்சயம் நீட் தேர்வு தமிழகத்தில் இருந்து விலக்கு கிடைக்கும். ஏற்கனவே அதிமுக அரசு அனுப்பிய நீட்டுக்கு எதிரான தீர்மானத்தை மத்திய அரசு மசோதாவை திருப்பி அனுப்பிய போதும், இவர்கள் அங்கு சென்று வாதாடவில்லை, உரிய அழுத்தம் தரவில்லை என்று குற்றம் சாட்டினார். அப்போது இத்தேர்வு குறித்து ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு 4 நாட்களாக நீட் ஆய்வு நடத்தி வருகிறது.
 
எனவே அவர்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையிலேயே இது குறித்து முடிவு எடுக்கப்படும். கடந்த ஆண்டுகளில் மசோதா திருப்பி அனுப்பப்பட்ட நிலை வந்துவிடக்கூடாது என்பதாலும், சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றுவதற்கு முன்பாக வலிமையான காரணங்கள் வேண்டும் என்பதாலும், இதுகுறித்து ஆராய நீதியரசர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.  நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என்பதில் அரசு மிக தீவிரமாகவும், வேகமாகவும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
 
நீட் தேர்வு கட்டாயம் என்கிற ஒரு நிலை வந்துவிட்டால், மாணவர்கள் சிரமப்படக்கூடாது என்பதற்காக பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் என்றார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்