ஜெ. உடல்நிலை விஷயத்தில் துணிந்து முடிவு எடுக்க வேண்டும்: கி.வீரமணி

Webdunia
திங்கள், 5 டிசம்பர் 2016 (23:30 IST)
ஜெயலலிதா உடல்நிலையில் மேலும் முன்னேற்றம் ஏற்பட, வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்வது குறித்து துணிந்து முடிவு எடுக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.


 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் உடல்நிலையில் நேற்று [ஞாயிற்றுக்கிழமை] மாலை முதல் ஏற்பட்ட பின்னடைவு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

தீவிர சிகிச்சைப் பிரிவில் நமது டாக்டர்கள் கண்காணித்து வருவது சற்று ஆறுதலானது என்றாலும் கூட, இவரது உடல்நிலையில் மேலும் முன்னேற்றம் ஏற்பட, இங்கிலாந்து அல்லது மற்ற வெளிநாடுகளுக்கு உடனடியாக அழைத்துச் செல்லும் வாய்ப்பு பற்றி, அருகிலிருந்து கவனிப்போர், துணிந்து முடிவு எடுப்பது பற்றி அவசரமாக ஆலோசித்து ஆவன மேற்கொள்ள வேண்டும்.

எம்.ஜி.ஆர். அவர்களை எப்படி மருத்துவ வசதி பெற்ற தனி விமானம் மூலம் அழைத்துச் சென்று, சிகிச்சை அளித்து குணப்படுத்தியதுபோல செய்யும் வாய்ப்பு பற்றி பரிசீலித்தல் அவசரம் அவசியம். முதல் அமைச்சர் விரைவாக உடல்நலம் தேற நமது விழைவுகள்” என்று தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்