சொகுசு கார் மீதான வரி ஏய்ப்பு வழக்கு ; நடராஜனுக்கு செக் வைத்த நீதிமன்றம்

புதன், 11 ஜனவரி 2017 (12:10 IST)
இங்கிலாந்தில் இருந்து விலை உயர்ந்த காரை இறக்குமதி செய்து, அதற்கு குறைவாக வரி கட்டுவதற்காக போலி ஆவணங்களை தயாரித்து கொடுத்த அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் கணவர் நடராஜனை, அந்த வழக்கிலிருந்து விடுவிக்க பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றம் மறுத்துவிட்டது.


 

 
1994ம் ஆண்டு, லண்டனில் இருந்து புத்தம் புதிய லெக்ஸஸ் காரை நடராஜன் இறக்குமதி செய்தர். அதை தனது தமிழரசி பப்ளிகேஷன் நிறுவனம் சார்பில் அவர் வாங்கியிருந்தார். 3 ஆயிரம் சி.சி. என்ஜின் திறன் கொண்ட அந்த கார் பல கோடி மதிப்புடையது. ஆனால், அந்த கார் 1993ம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்டதாகவும், ஏற்கனவே பயன்படுத்தபப்ட்ட கார் என காரின் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.
 
இதில் சந்தேகம் அடைந்த சுங்கத் துறையினர் நடத்திய விசாரணையில், அந்த கார் 1994ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட புதிய கார் என்பதும், வரி ஏய்ப்பு செய்வதற்காக, போலி ஆவணங்களை தயாரித்து நடராஜன் கொடுத்திருந்தது தெரியவந்தது. இதன் மூலம், அரசுக்கு 1 கோடியே 6 லட்சத்து 20 ஆயிரத்து 412 ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக சுங்கத் துறை அவர் மீது குற்றம் சாட்டியது. மேலும், நடராஜன், தமிழரசு பப்ளிகேஷன் நிர்வாகி வி.என்.பாஸ்கரன் மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த சில அதிகாரிகள் மீது சுங்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. அதன்பின் இந்த வழக்கு சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.
 
இந்த வழக்கு கடந்த 20 வருடங்களாக நடைபெற்று வந்தது. அதன் பின் கடந்த 2010ம் ஆண்டு நீதிபதி அளித்த தீர்ப்பில், நடராஜன் உட்பட அனைவருக்கும் தலா 2 வருடம் சிறைத்தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. 
 
அந்த வழக்கை எதிர்த்து நடராஜன் உட்ப 4 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதை விசாரித்த நீதிமன்றம் அவர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. மேலும், அவர்களுக்கு ஜாமீனும் வழங்கப்பட்டது. அதன் பின் அந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது.
 
அந்நிலையில் அந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என நடராஜன் மற்றும் பாஸ்கரன் ஆகியோர் கடந்த 2012ம் ஆண்டு குற்றப்பிரிவ்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்து நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. மேலும், வருகிற பிப்ரவரி 2ம் தேதி இந்த வழக்கின் விசாரணை மீண்டும் துவங்கும் என தீர்ப்பளித்தது. 
 
எனவே, இந்த வழக்கில் நடராஜன், திவாகரன் மீது நடவடிக்கை பாயும் எனத் தெரிகிறது. சமீபத்தில், அந்நிய செலவாணி மோசடி வழக்கில், சசிகலாவின் உறவினர் டி.டி.வி. தினகரனுக்கு ரூ.25 கோடி அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்