ஓபிஎஸ் தான் ஜெயலலிதா மரணத்திற்கு காரணமா?: கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க நாஞ்சில் சம்பத்!

வெள்ளி, 12 மே 2017 (10:53 IST)
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 75 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக அதிமுகவின் ஓபிஎஸ் அணி உட்பட பல அரசியல் கட்சிகள், பொதுமக்கள் என பலரும் சந்தேகத்தை எழுப்புகின்றன.


 
 
ஆனால் எந்தவித மர்மமும் இல்லை என சப்பக்கட்டு கட்டுகிறது சசிகலா அணி. இந்நிலையில் ஓபிஎஸ் அணியினர் ஜெயலலிதாவின் மரணம் குறித்தான சிபிஐ விசாரணை தேவை என கோரிக்கை வைத்து வருகிறது.
 
இதுகுறித்த கேள்விக்கு அதிமுக சசிகலா அணியில் உள்ள நாஞ்சில் சம்பத் பிரபல வார இதழ் ஒன்றுக்கு பதில் அளித்துள்ளார். அதில் ஜெயலலிதாவின் மரணத்தில் எந்தவித மர்மமும் இல்லை, சந்தேகமும் இல்லை என கூறும் அவர் விசாரணை நடந்தால் ஓபிஎஸ் தான் முதல் குற்றவாளியாக நிற்பார் என கூறியுள்ளார்.
 
ஜெயலலிதா மரணம் குறித்தான குற்றச்சாட்டு வக்கிரமமானது. மருத்துவ உலகத்தின் மீது பழிபோடுகிறார். கடல் கடந்த நாடுகளில் இருந்து வந்து சென்னையில் மருத்துவம் பார்க்கிறார்கள். அந்தத் தகுதியைப் பெற்றுத் தந்தது அப்போலோ மருத்துவமனை.
 
மத்திய அரசின் கண்காணிப்பில் உள்ள எய்ம்ஸ் மருத்துவர்கள், லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே ஆகியோர் 75 நாள்கள் சிகிச்சை அளித்து இருக்கும்போது தவறு நடக்க வாய்ப்பு இருக்கிறதா? அவருடைய மரணத்தில் எந்த மர்மமும் இல்லை என கூறிய நாஞ்சில் சம்பத் அப்படியொரு விசாரணை வந்தால் அப்போதும் முதல் குற்றவாளியாக ஓ.பன்னீர்செல்வம்தான் நிற்பார் என்றார்.
 
இதில் நமக்கு என்ன சந்தேகம் என்றால், ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இல்லை, மர்மம் இல்லை என்கிறார் நாஞ்சில் சம்பத் ஆனால் விசாரணை வந்தால் ஓபிஎஸ் குற்றவாளியாக நிற்பார் என்கிறார். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இல்லை என்கிறாரா அல்லது ஓபிஎஸ் தான் ஜெயலலிதா மரணத்திற்கு காரணமா கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க நாஞ்சில் சம்பத்.

வெப்துனியாவைப் படிக்கவும்