அதிமுக அம்மா அணிக்கு ஆதரவு கொடுத்து வரும் நாஞ்சில் சம்பத், சமீபத்தில் பாஜக இளைஞரணி தலைவர் மேற்குவங்க முதல்வர் மம்தாவின் தலைக்கு ரூ.11 லட்சம் அறிவித்தது குறித்து தனது ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார். இந்த அறிவிப்பு தன்னை தடி கொண்டு தாக்கியதை போல இருந்ததாகவும், தலையில் இடி விழுந்ததை போல இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:
ஏற்கனவே கேரள முதல்வர் பினராய் விஜயனின் தலைக்கு 2 கோடி ரூபாய் விலை வைத்தார்கள். பாரதீய ஜனதா இல்லாத மற்ற கட்சிகள் ஆளுகிற இப்படி ஒரு மோதல் போக்கை பாரதீய ஜனதா கட்சி திட்டமிட்டு உருவாக்கி வருகிறது. இந்தியா முழுவதையும் காவி மயமாக்க துடிக்கும் வகுப்புவாத ஓநாய்களின் அறிவிப்பு இந்தியாவிற்கு மிகப்பெரிய அறைகூவல்களாகும். கார்பரேட் கம்பெனிகளுக்காக கடை விரித்துள்ள பாரதீய ஜனதாவின் ஆட்சி இந்தியாவுக்கு சாபக்கேடு.உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் அவர்கள் வெற்றி பெற்ற பிறகு அவர்களின் ஆணவம் உச்சந்தலைக்குச் சென்று விட்டது. அதன் அடையாளம் தான் தலை வெட்டி தம்புரான்கள் இப்படி திட்டமிட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தி விடுவதற்கு படாதபாடு படுகிறார்கள்.
காங்கிரஸ் அல்லாத ஆட்சி நடைப்பெற்ற மாநிலங்களில் அன்றைக்கு காங்கிரஸ் கொடுத்த நெருக்கடியை பாரதீய ஜனதா இன்று வேறு வடிவில்செய்கிறது. இந்தியாவின் விடுதலையை தீர்மானித்த காங்கிரஸே இன்று விழி பிதுங்கி நிற்கும் பொழுது தலைவெட்டி தம்புரான்கள் கதை நாளைக்கு என்னவாகும் என்பதை சரித்திரம் சொல்லும். வேற்றுமையில் ஒற்றுமை காண விரும்பாத இந்த காவிக் கும்பலை எல்லா முனையிலும் நிராகரிக்க மக்கள் முடிவெடுக்காவிட்டால் மக்களின் தலைக்கும் விலை வைப்பார்கள் , ஆகவே தலை பத்திரம்.