நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கப்பல் சேவை தொடங்கி வைக்கப்பட்ட நிலையில் பருவநிலை மாற்றம், பயணிகள் எண்ணிக்கை குறைவு உள்ளிட்ட காரணங்களால் சில நாட்களில் நிறுத்தப்பட்டது.
இதனை அடுத்து மீண்டும் ஆகஸ்ட் 16ஆம் தேதி நாகை - காங்கேசன்துறை இடையே கப்பல் சேவை தொடங்கிய நிலையில் முதல் நாளில் நாகையிலிருந்து 44 பேர் இலங்கை சென்ற நிலையில் அதில் பின்னர் பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது. நேற்று நாகையிலிருந்து காங்கேசன்துறைக்கு வெறும் ஐந்து பேர்கள் மட்டுமே சென்றதாகவும் இலங்கையில் இருந்து நாகைக்கு 14 பேர்கள் மட்டுமே பயணம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
செவ்வாய், வியாழன், ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் மட்டும் நாகை காங்கேசன்துறை இடையிலான கப்பல் சேவை இருக்கும் என்றும் அடுத்த மாதம் 15 ஆம் தேதி வரை இந்த நடைமுறை தொடரும் என்றும் பயணிகள் வருகையை பொருத்து தினமும் கப்பல் சேவை இயக்குவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் கப்பலை இயக்கும் நிறுவனம் தெரிவித்துள்ளது.