கடந்த ஜுன் 30 ஆம் தேதி பாம்பனிலிருந்து ஜார்ஜ் என்பவருக்குச் சொந்தமான நாட்டுப் படகில் 7 பேர் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகச் சொல்லி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும், புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து கடலுக்குச் சென்ற 2 விசைப்படகுகளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர் அதிலிருந்த 9 மீனவர்களை கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.
இந்த 16 மீனவர்கள் மீதான வழக்கு கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நளினி சுபாஸ்கரன், பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் 7 பேரும் மீண்டும் இலங்கை கடற்பகுதியில் மீன்பிடிக்கக்கூடாது என்ற நிபந்தனை அடிப்படையில் விடுதலை செய்தார். எனினும் அவர்களது படகை நாட்டுடைமையாக்கி உத்தரவிட்டார்.
புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களில், ஒரு விசைப்படகில் படகில் இருந்த 4 மீனவர்களில் இருவரை விடுதலை செய்ததுடன், அந்த படகின் உரிமையாளர் இருந்ததால் உரிமையாளருக்கும், படகு ஓட்டுநருக்கும் அபராதமும், தலா ஓராண்டு சிறை தண்டனை விதித்தும் உத்தரவிட்டார். மேலும், இரண்டாவது படகில் இருந்த 5 மீனவர்களில் படகு ஓட்டுநரும் உரிமையாளரும் ஒரே நபர் என்பதால் அவருக்கு அபராதமும், இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்தும் உத்தரவிட்டார்.