புவனேஷ்வர் மாநகராட்சி அலுவலகத்தில் ஒரு மூத்த அதிகாரி குறைதீர்ப்பு விசாரணை செய்து கொண்டிருந்த வேளையில், சிலர் திடீரென அவரது அறைக்குள் நுழைந்து, அவரது சட்டையை பிடித்து இழுத்து, அவரை தாக்கியதாக தெரிகிறது. பா.ஜ.க. பிரமுகர் ஜெகந்நாத் பிரதான் என்பவருடன் அந்த அதிகாரிக்கு மோதல் இருந்ததால் தான் இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தாக்கப்பட்ட அதிகாரி கூறியபோது, நான் காலை 11.30 மணியளவில் குறைதீர்ப்பு விசாரணை நடத்திக் கொண்டிருந்தபோது, BMC கார்ப்பரேட்டர் ஜீவன் ராவத் உட்பட ஐந்தாறு பேர் என் அறைக்குள் அத்துமீறி நுழைந்தனர். அவர்கள் அறைக்குள் வந்ததும், 'ஜெகந்நாத் பிரதான் உடன் நான் தவறாக நடந்துகொண்டது குறித்து வாக்குவாதம் செய்தனர். அதை நான் மறுத்தபோது, அவருடன் வந்தவர்கள் என்னிடம் தவறாக பேசத் தொடங்கி, வலுக்கட்டாயமாக என்னை வெளியே இழுத்து சென்றனர். அவர்கள் என்னை என் அலுவலகத்திலிருந்து வெளியே இழுத்து சென்று, அடித்து உதைத்து, எங்கள் வாகனத்தில் வலுக்கட்டாயமாக ஏற்ற முயன்றனர் என்ரு தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜீவன் ராவத், ரஷ்மி மகாபத்ரா, மற்றும் தேபாசிஸ் பிரதான் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
BMC மேயர் சுலோச்சனா தாஸ் இந்த சம்பவத்தைக் கண்டித்ததுடன், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.