சிவகங்கையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோவில் வாட்ச்மேன் அஜித்குமார் உயிரிழந்த வழக்கில் 5 போலீஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் உள்ள கோவில் ஒன்றில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித்குமார் என்ற இளைஞரை சமீபத்தில் நகை திருட்டு வழக்கு ஒன்றில் விசாரிப்பதற்காக அழைத்து சென்ற நிலையில் அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலிஸார் விசாரணை என்ற பெயரில் அவரை அடித்துக் கொன்றுவிட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், விசாரணையில் ஈடுபட்ட காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். நேற்று இந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடைபெற்றபோது நீதிபதிகள் கடுமையான கேள்விகளை முன்வைத்தனர்.
அதை தொடர்ந்து அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற 5 காவலர்கள் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அஜித்குமார் விசாரணை கைது குறித்து எழுதப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் அஜித் போலீஸாரிடமிருந்து தப்பிக்க முயற்சித்தபோது வழுக்கி விழுந்ததாகவும், பின்னர் வலிப்பு ஏற்பட்டு இறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அஜித்குமாரின் பிரேத பரிசோதனையில் அவரது உடலில் பல பகுதிகளில் காயங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. இதனால் காவல்துறையின் முதல் தகவல் அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
Edit by Prasanth.K