நாங்கள் செல்வதற்குள் பணம் கொடுப்பவர்கள் தப்பி விடுகிறார்கள்: ராஜேஷ் லக்கானி புலம்பல்

Webdunia
வியாழன், 12 மே 2016 (11:04 IST)
ஆங்காங்கே பணம் கொடுப்பதாக புகார்கள் வருகிறது. உடனே பறக்கும் படையினர் அங்கே அனுப்பி வைக்கப்படுகின்றனர். அதற்குள் அங்கு ஆட்கள் தப்பி விடுகிறார்கள் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.
 

 
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி ஆலோசனை நடத்தினார்.
 
செவ்வாயன்று சென்னை உள்பட 16 மாவட்டங்களில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் பற்றி அவர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசினார். புதனன்று (மே 11) 2-வது நாளாகவும் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி காணொலி காட்சி மூலம் தமிழக அதிகாரிகளுடன் பேசினார்.
 
இதில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, தலைமை செயலாளர் உள்துறை செயலாளர் டி.ஜி.பி. வருமான வரித்துறை இயக்குனர், மதுவிலக்கு அமலாக்க துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜேஷ் லக்கானி, “தேர்தலையொட்டி 14ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரையிலும் மற்றும் 19-ம் தேதியும் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும். புதுச்சேரி, கேரளாவிலும் தேர்தல் நடைபெறுவதால் அங்கும் மதுபான கடைகள் மூடப்பட்டிருக்கும்.
 
தமிழகத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம்.ஒரு தொகுதிக்கு 25 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஒரு ஷிப்டுக்கு 25 பேர் வீதம் 3 ஷிப்ட்களில் பணியாற்றுவார்கள்.சென்னையில் 1 தொகுதிக்கு 8 பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
ஒவ்வொரு பறக்கும் படையிலும் 1 துணை ராணுவ வீரர் பணியில் இருப்பார். ஆங்காங்கே பணம் கொடுப்பதாக புகார்கள் வருகிறது. உடனே பறக்கும் படையினர் அங்கே அனுப்பி வைக்கப்படுகின்றனர். அதற்குள் அங்கு ஆட்கள் தப்பி விடுகிறார்கள்.
 
கரூர் கே.சி.பழனிச்சாமியின் வீடு அலுவலகங்களில் இருந்து ரூ. 2 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது. அங்கு வருமான வரி அதிகாரிகளின் சோதனை முடிந்துள்ளது. கைப்பற்றப்பட்ட பணம் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்” என்று கூறியுள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்...
அடுத்த கட்டுரையில்