அரவக்குறிச்சியில் இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்த முஸ்லிம் மக்கள் அதிகம் உள்ள பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட கமல்ஹாசன் ’உண்மையான முஸ்லீம்கள் தீவிரவாதத்தை ஏற்க மாட்டார்கள். மேலும் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே. நான் காந்தியின் கொள்ளுப்பேரன் அவரது கொலைக்கு கேள்வி கேட்க வந்துள்ளேன். இந்தியாவை பிரித்தாள நினைக்கும் சித்தாந்தத்தை வெளியேற்ற வேண்டும் என்றும், தீவிரவாதம் எந்த மதத்தின் பெயரில் இருந்தாலும் அது தவறு’ என்று கூறினார்.
அதையடுத்து அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா நாளிதழில் கமலைப் பற்றி அருவருக்கத்தக்க வகையில் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் பொலி காளைக்குப் புரியுமோ புனிதமிகு இந்து தர்மம் என்னும் தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளது. செய்தியின் அருகில் கமல் தனது மகள் ஸ்ருதிஹாசனுக்கு முத்தமிடும் புகைப்படத்தையும் பிரசுரித்துள்ளனர். கமலைப் பொலிகாளை என்றும் செய்திக்கு துளியும் சம்மந்தம் இல்லாத புகைப்படத்தை வைத்தும் அருவருக்கத்தக்க வகையில் இந்த செய்தி உள்ளதாக சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது.