மனநலம்‌ பாதிக்கப்பட்டவர்களெல்லாம்‌ எங்களது தலைவரை விமர்சனம்‌ செய்யலாமா? எச்.ராஜாவுக்கு கமல் கட்சி பதிலடி

ஞாயிறு, 19 ஏப்ரல் 2020 (08:27 IST)
நேற்று பாஜக பிரமுகர் எச்.ராஜா, கமல்ஹாசனை ‘பால்கனி பையன்’ என தனது டுவிட்டரில் விமர்சனம் செய்ததிற்கு பதிலடி தரும் வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொழிலாளர் அணி மாநில செயலாளர்‌ சு.ஆ.பொன்னுசாமி விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
அன்பிற்கினிய எச்‌.ராசா அவர்களுக்கு வணக்கம்‌. பேசுகிறேன்‌... பேட்டியளிக்கிறேன்‌.. என்கிற பெயரில்‌ நீங்கள்‌ வழக்கம்‌ போல்‌ வாயைத்‌ திறந்தாலே கழிவறையின்‌ துர்நாற்றம்‌ தான்‌ உங்களது பேச்சில்‌ தென்படும்‌. அதனால்‌ தானோ என்னவோ நீங்கள்‌ நீதித்துறையை தலைமுடிக்கு ஒப்பிட்டு பேசிய போது கூட நீதிதேவதையே வெட்கி தலை குனிந்து நின்றதை தமிழகம்‌ மட்டுமல்ல உலகமே கைகட்டி வேடிக்கை பார்த்தது. காரணம்‌ மத்தியிலும்‌, மாநிலத்திலும்‌ உள்ள ஆட்சியாளர்களின்‌ ஆதரவோடு தமிழக காவல்துறையின்‌ கைகள்‌ கட்டப்பட்டு, உங்களுக்கு சலாம்‌ போட்டுக்‌ கொண்டிருந்ததால்‌ தான்‌ என்பதை நீங்கள்‌ தமிழ்‌ கூறும்‌ நல்லுலகம்‌ மறுக்காது.
 
இந்நிலையில்‌ கொரானாவெனும்‌ கொள்ளை நோய்‌ வெளிநாடுகளில்‌ இருந்து வானவூர்தி வழியே இந்தியாவிற்குள்‌ நுழைய ஜனவரி 3ம்‌ தேதி இந்தியாவில்‌ முதல்‌ நோயாளியை அடையாளம்‌ கண்ட பிறகும்‌ கூட சுதாரித்து கொள்ளாமல்‌ ஆற, அமர யோசித்து பணமதிப்பிழப்பு நடவடிக்கை போல்‌ திடீரென ஒரு நாள்‌ (மார்ச்‌-24) இரவு 8.00மணிக்கு மக்களோடு உரையாற்றுகிறேன்‌ என்கிற பெயரில்‌ இந்தியா முழுவதும்‌ ஊரடங்கை பிரதமர்‌ மோடி அவர்கள்‌ அமுல்படுத்த ஏழை, எளிய, நடுத்தர மக்கள்‌, பல்வேறு துறை சார்ந்த தொழிலாளர்கள்‌, தினக்கூலிகள்‌ என உழைக்கும்‌ வர்க்கத்தினரும்‌, நாட்டின்‌ பொருளாதாரத்தை தூக்கிப்‌ பிடிக்கும்‌ தொழில்‌ துறையினரும்‌ ஒட்டுமொத்தமாக ஸ்தம்பித்துப்‌ போயினர்‌.
 
அதே சமயம்‌ இந்தியாவின்‌ பல்வேறு மாநிலங்களின்‌ எதிர்கட்சிகளும்‌, பிரபலங்களும்‌ நமக்கென்ன வந்தது என வாய்‌ பொத்தி வீடுகளுக்குள்‌ தங்களை தனிமைப்படுத்தி முடங்கிப்‌ போய்‌ கிடக்க, பால்கனி மக்களுக்கான ஆட்சி நடத்தும்‌ மோடி சர்க்காரின்‌ தவறை சுட்டிக்‌ காட்டி கடந்த 6ம்‌ தேதி "மக்கள்‌ நீதி மய்யம்‌” கட்சியின்‌ தலைவர்‌ மரியாதைக்குரிய திரு. கமல்ஹாசன்‌ அவர்கள்‌ பிரதமருக்கு காட்டமான மனம்‌ திறந்த கடிதம்‌ ஒன்றை எழுதினார்‌.
 
நம்மவர்‌ அவர்கள்‌ பிரதமருக்கு கடந்த 5ஆம்‌ தேதி கடிதம்‌ எழுதிய போது வாய்‌ திறக்காத நீங்கள்,‌ ஒருவேளை அப்போது கோமாவில்‌ இருந்திருப்பீர்கள்‌ என நினைக்கிறேன்‌. ஏனெனில்‌ நம்மவர்‌ அவர்கள்‌ பிரதமருக்கு கடிதம்‌ எழுதிய சுமார்‌ 13நாட்கள்‌ கடந்து விட்ட நிலையில்‌ என்ன பேசலாம்‌..?, ஏது பேசலாம்‌...? என அறை எடுத்து தங்கி ரொம்ப யோசனை செய்த பின்‌ "இந்தியாவின்‌ மூன்றில்‌ இரண்டு பங்கு மக்களால்‌ பெரும்பான்மையாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை 65 வருட காலமாக பணம்‌ ஈட்டுவதில்‌ மும்முரமாய்‌ இருந்த பால்கனி பையன்‌ விமர்சிக்கிறார்‌” என ஒருமையில்‌ விளித்து வழக்கமான உங்கள்‌ குரூர விஷம பேச்சை ஊடகங்கள்‌ முன்‌ கொட்டியுள்ளீர்கள்‌.
 
மிஸ்டர்‌ ராசா அவர்களே “மக்களின்‌ வரிப்பணத்தை கொள்ளையடித்து, மாட மாளிகைகளும்‌, கூட கோபுரங்களும்‌ கட்டி பல தலைமுறைகளுக்கு சொத்து சேர்த்து, கூழை கும்பிடு போட்டு மக்களையும்‌, அரசையும்‌ ஏமாற்றி வரும்‌ திருட்டு கட்சிகளை சேர்ந்த அரசியல்வாதியல்ல நம்மவர்‌ என்பது திருட்டுக்‌ கூட்டங்களோடு இணைந்திருக்கும்‌ உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
 
நீங்க சொல்வது போல்‌ 65 ஆண்டுகாலம்‌ அவர்‌ திரையுலகில்‌ கோலோச்சினாலும்‌ கூட தான்‌ சம்பாதித்த பணத்திற்கு முறையாக கணக்கு காட்டி, சரியான வருமானவரி செலுத்தி, வருமான வரித்துறையால்‌ நற்சான்றிதழ்‌ பெற்றவர்‌. அதுமட்டுமின்றி தான்‌ சம்பாதித்த பணத்தை எல்லாம்‌ அங்கேயே போட்டு தமிழ்‌ திரையுலகை உலகளவில்‌ கொண்டு சென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த பிறகும்‌ கர்வம்‌ கொள்ளாமலும்‌, பணம்‌ ஈட்டுவதையே குறிக்கோளாகவும்‌ கொள்ளாமல்‌ மக்கள்‌ நலனுக்கான, மாற்றத்தை உருவாக்கும்‌ அரசியலை முன்னெடுத்திருக்கும்‌ உதாரண மனிதன்‌ அவர்‌.
 
உங்களைப்‌ போன்ற மனநலம்‌ பாதிக்கப்பட்டவர்களெல்லாம்‌ எங்களது தலைவரை விமர்சனம்‌ செய்வது வெட்கக்கேடானது. எனவே நம்மவரை தேவையின்றி விமர்சனம்‌ செய்வதை விட்டு, விட்டு ஏழை, எளிய, நடுத்தர மக்களின்‌ உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஆட்சி செய்ய உங்களது தலைமைக்கு அறிவுறுத்துங்கள்‌.
 
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்