தமிழக அரசியலில் தொற்றிக்கொண்ட பரபரப்பு இன்னமும் முடிவுக்கு வராமல் தொடர்ந்து பதற்றமாகவே நகர்ந்து வருகிறது. சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டு அணியாக அதிமுக பிளவுபட்டு நிற்கிறது. இறுதியில் வெல்லப்போவது யார் என்பது யாருக்கும் புரியாத புதிராக உள்ளது.
ஓபிஎஸுக்கு ஆதரவாக பல 6 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் மீதமுள்ள எம்எல்ஏக்களை தன் பக்கம் தக்கவைத்துக்கொள்ள சசிகலா கூவத்தூரில் உள்ள சொகுசு விடுதியில் சிறை வைத்துள்ளார். இதனால் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சசிகலா சிறை வைத்துள்ள எம்எல்ஏக்களில் பன்னீர் ஆதரவு எம்எல்ஏக்கள் இருப்பதாகவும், அவர்களை அங்கு கொடுமை படுத்துவதாகவும் தகவல்கள் வருகின்றன. மேலும் சசிகலா ஆதரவில் இருந்த பல எம்எல்ஏக்கள் வெளியே வந்தால் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவளிக்கும் மனநிலையில் உள்ளதாக பேசப்படுகிறது.
சொகுசு விடுதியில் சிறை வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்கள் சிலருக்கு சர்க்கரை வியாதி இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் கொண்டு சென்ற சர்க்கரை வியாதி மருந்துகள் முடிந்து வேறு மாத்திரை இல்லாமல் அவதிப்பட்டு வந்ததாக செய்திகள் வந்தன.
இந்நிலையில் அங்குள்ள 8 எம்எல்ஏக்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. இதனால் அவசர அவசரமாக கூவத்தூரில் எம்எல்ஏக்கள் உள்ள சொகுசு விடுதிக்கு ஆம்புலன்ஸ்களும், மருத்துவர்களும் விரைந்துள்ளனர்.