ஓராண்டு நிறைவு - புதிய அறிவிப்புகளை அறிவித்தார் முதல்வர்!
சனி, 7 மே 2022 (11:40 IST)
இன்று சட்டச்சபையில் நன்றி தெரிவித்து பேசும் மு.க.ஸ்டாலின், சில புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி பெற்றது. பத்தாண்டுகளுக்குப் பின் திமுக ஆட்சியைப் பிடித்தது. திமுக தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது. 2021 மே 7 ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் தமிழ்நாட்டின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்டார்.
ஸ்டாலின் முதல்வராக பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. திமுக கட்சியும் தனது ஓராண்டு ஆட்சியை நிறைவு செய்துள்ளது. எனவே இன்று சட்டச்சபையில் நன்றி தெரிவித்து பேசும் மு.க.ஸ்டாலின், சில புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார் என்று எதிர்பாக்கப்பட்டது.
இந்த எதிர்பார்ப்பு வீணாகாமல் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் முக ஸ்டாலின். அவை பின்வருமாறு...
1. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இனி காலை சிற்றுண்டி வழங்கப்படும். முதற்கட்டமாக 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம்.
2. 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து திட்டம்.
3. டெல்லியைப் போல் தமிழ்நாட்டில் தகைசால் பள்ளிகள் உருவாக்கப்படும். 108 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பள்ளிகள் மேம்படுத்தப்படும்.
4. உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் 234 தொகுதிகளிலும் நடைமுறைப்படுத்தப்படும், இதற்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு.
5. கிராமங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருப்பது போல நகரங்களில் மருத்துவ நிலையங்கள் அமைக்கப்படும்.
6. உலகத்தரத்தில் கட்டமைப்பு தொய்வில்லாத தொழில் வளர்ச்சி உள்ளிட்ட 6 மாபெரும் இலக்கு அரசுக்கு உள்ளது. நிதி நெருக்கடி, ஒன்றிய அரசின் செயல்பாடுகள் நமது சேகத்தை குறைக்கிறது.