ஸ்டாலினின் ஓராண்டு ஆட்சி நிறைவு - சொன்னது என்ன? செய்தது என்ன?
சனி, 7 மே 2022 (09:05 IST)
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே இலக்கு என இருந்த முதல்வர் ஸ்டாலின், ஆட்சிக்கு வந்தவுடன் செய்ததும்... செய்ய தவறியதும்...
ஓராண்டு ஆட்சி நிறைவு:
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி பெற்றது. பத்தாண்டுகளுக்குப் பின் திமுக ஆட்சியைப் பிடித்தது. திமுக தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது. 2021 மே 7 ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் தமிழ்நாட்டின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்டார்.
ஸ்டாலின் முதல்வராக பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. திமுக கட்சியும் தனது ஓராண்டு ஆட்சியை நிறைவு செய்துள்ளது. ஓராண்டு நிறைவு கொண்டாட்டமாக, தலைமை செயலகம், சட்டப்பேரவை வளாகம், அண்ணா அறிவாலயம், கருணாநிதி நினைவிடம் ஆகியவை அலங்கரிக்கப்பட்டுள்ளன. கழகத்தினர் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
சொன்னதும் செய்ததும்:
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே முக்கிய இலக்கு என இருந்த முதல்வர் ஸ்டாலின், ஆட்சிக்கு வந்தவுடன் கொரோனா நிவாரணமாக ரூ.4,000, மகளிர் பேருந்து பயணம் இலவசம், விவசாயிகளுக்கு ஒரு லட்சம் மின் இணைப்பு, ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு என முதற்கட்டமாக பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது.
மேலும் அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை, வன்னியர்கள், சீர்மரபினர் மற்றும் இதர மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 10.5% சிறப்பு ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு அங்கீகாரம், தொழிற்கல்விப் படிப்புகளில் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க 7.5% ஒதுக்கீடு ஆகியவையும் நிறைவேற்றப்பட்டது.
இதோடு நிற்காமல் மக்களைத் தேடி மருத்துவம், உங்கள் தொகுதியில் முதல்வர், அன்னைத் தமிழில் அர்ச்சனை, வீடு தேடி கல்வி, நீட் தேர்வுக்கு எதிராக மசோதா போன்ற பல திட்டங்களை நடைமுறையில் செயல்படுத்தி வருகின்றனர்.
சொன்னதும் தவறியதும்:
ஆனால், குடும்பத்தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, பொங்கலுக்கு பரிசுத்தொகை வழங்காதது மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மின்வெட்டு, காவல்துறை விசாரணை மரணங்கள் என பல குறைபாடுகளையும் ஆட்சியில் வைத்துள்ள திமுக இதனையும் சரிசெய்ய அடுத்தடுத்த ஆட்சி ஆண்டுகளில் முயற்சிக்கனும்...