கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பொருளாதார ரீதியாக உதவவும், மருத்துவ உபகரணாங்களுக்கு ஏற்பாடு செய்யவும் நிதி அதிகம் தேவைப்படுவதால் மக்களிடம் நிவாரண நிதி வழங்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு கொரோனா நிவாரண நிதியாக முதற்கட்டமாக ரூ.510 கோடி மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. நிதியை அதிகரிக்க எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதியை 2 ஆண்டுகளுக்கு நிறுத்துதல், எம்.பிக்கள் சம்பளத்தில் இருந்து 30 சதவீதம் பிடித்தம் செய்தல் போன்றவற்றையும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசின் இந்த செயல்பாட்டிற்கு கண்டனம் தெரிவித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார். அதில் “குறைவான பாதிப்புகள் உள்ள மாநிலங்களுக்கு அதிக அளவிலான நிதியை ஒதுக்கிவிட்டு, அதிகம் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு குறைவான தொகையை ஒதுக்கியுள்ளார்கள். பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் மத்திய அரசு அதிக சலுகை காட்டுகிறதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் “எம்பி தொகுதி மேம்பாட்டு நிதி என்பது பாராளுமன்ற உறுப்பினர்கள் நலனுக்கு கொடுப்பதல்ல. அந்தந்த தொகுதிகளில் மக்களுக்கு அத்தியாவசியமான சில தேவைகளை எம்.பிக்கள் நிறைவேற்ற தொகுதி நிதி முக்கியம். அதை 2 ஆண்டுகளுக்கு ரத்து செய்வதால் மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தருவதில் சிக்கல் ஏற்படும். ” என கூறியுள்ளார்.
தற்போது எம்பிக்கள் தொகுதி நிதி கிடைத்திருந்தால் அது கொரோனா தடுப்பு பணிகளுக்கு பேருதவியாக இருந்திருக்கும். மொத்தத்தில் கொரோனா நிவாரணமாக குறைவான நிதியை கொடுத்துவிட்டு, பதிலாக எம்பிக்கள் நிதியை 2 ஆண்டுகள் நிறுத்திவிட்டதாக எதிர்கட்சிகள் கருதுவதாக அரசியல் வட்டாரங்களில் பேசிக் கொள்ளப்படுகிறது.