புதுக்கோட்டையில் நடந்த துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வென்ற அமைச்சர் டிஆர்பி ராஜாவின் மகன், பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கையில் பதக்கம் வாங்க மறுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவாரக்குடிபட்டியில் மாநில அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடைபெற்ற நிலையில், அதில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், பாஜக தலைவருமான அண்ணாமலை சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டார்.
இந்த துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் திமுக அமைச்சர் டிஆர்பி ராஜாவின் மகன் சூரிய ராஜபாலு கலந்து கொண்டு வெற்றி பெற்றிருந்தார். வெற்றி பெற்றவர்களுக்கு அண்ணாமலை பதக்கங்களை கழுத்தில் அணிவித்து கௌரவித்தார். சூரிய ராஜபாலுவுக்கு பதக்கத்தை அணிவிக்க அண்ணாமலை சென்றபோது அதை மறுத்த அவர் அதை தனது கைகளில் பெற்றுக் கொண்டு போட்டோ எடுத்துக் கொண்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு எழுந்தது.
இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை “ஒருவர் யார் கையால் பதக்கம் பெற வேண்டும் அல்லது பெற வேண்டாம் என நினைப்பது அவரவர் விருப்பம்தான். அவர் என் கையால் பதக்கம் வாங்க மறுத்துவிட்டார் என்பது இங்கே முக்கியமில்லை. டிஆர்பி ராஜாவின் மகன் எங்கிருந்தாலும் சிறப்பாக செயல்பா வேண்டும். இந்த துறையில் பல சாதனைகள் படைத்து பெரிய மனிதராக வளர வேண்டுமென மனதார வாழ்த்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.
Edit by Prasanth.K