கமல் மாடி, நாங்கள் குடிசை: ஜெயகுமார் பதிலடி!

சனி, 6 ஜனவரி 2018 (15:33 IST)
நடிகர் கமல்ஹாசன் மாடியில் இருந்து பார்ப்பவர், நாங்கள் குடிசையில் இருந்து மக்களின் கஷ்டங்களை பார்த்தவர்கள் என நடிகர் கமலுக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.
 
தமிழக போக்குவரத்து ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சில நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் உள்பட பலர் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் இதுதொடர்பாக தனது கருத்தை டுவிட்டரில் பதிவு செய்தார் நடிகர் கமல்.
 
அதில், தமிழக முதலமைச்சர், மக்கள் அனுபவிக்கும் இன்னல்களையும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளையும் மனதில் கொண்டு, தயவாய் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். பொங்கலுக்கு அதுவே அரசுதரும் விலைமதிப்பிலா பரிசாகும் என கூறியிருந்தார்.
 
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மீனவளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம், கமல்ஹாசன் பொங்கல் பரிசுத் திட்டத்தினை மறைமுகமாகச் சாடியுள்ளாரே என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர், பொங்கல் பரிசுத் திட்டத்தை நேற்று முதல்வர் துவக்கி வைத்தார்.
 
வேட்டி, சேலை வழங்கும் திட்டம் மூலம் நெசவாளர்கள் பயன்பெறுகின்றனர். அரசுக்கு பல்வேறு நிதிநெருக்கடிகள் இருந்தபோதும் கூட மக்கள் பயன்பெறக் கூடிய வகையில் பொங்கல் பரிசு உள்ளிட்ட ஏனைய திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. அடித்தட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவர்களின் கஷ்டங்களை உணர்ந்துள்ள காரணத்தால் இவைகள் வழங்கப்படுகின்றன.
 
வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்று வழங்கப்படுவது இல்லை. நடிகர் கமல்ஹாசனை நாங்கள் கேட்டுக்கொள்வது என்னவென்றால் அடித்தட்டு மக்களுக்கு ஆதரவாக இருக்கும் இந்த திட்டங்களை கைவிட வேண்டும் என்று நினைக்கிறாரா? மேலும் கமல்ஹாசன் மாடியிலிருந்து பார்ப்பவர், நாங்கள் குடிசையில் இருந்து மக்களின் கஷ்டங்களைப் பார்த்தவர்கள் என தெரிவித்தார் அமைச்சர் ஜெயக்குமார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்