இனி பாட்டிலில் தான் பால் விற்க வேண்டும்; பால் பாக்கெட் கூடாது: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Webdunia
வெள்ளி, 12 ஜூலை 2019 (09:02 IST)
பிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது என்ற தமிழக அரசின் உத்தரவு செல்லும் என்று உத்தரவிட்ட நிலையில், இனி பால் பாக்கெட் விற்கக்கூடாது என்ற அதிரடி உத்தரவை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

மறு சுழற்சி செய்ய முடியாத 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு, கடந்த ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது.
பின்பு ஜனவரி 2019 முதல் அமலுக்கு வந்தது. இந்த உத்தரவை எதிர்த்து பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் என பல்வேறு அமைப்புகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

இந்த வழக்கு  நீதிபதிகளான எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ஆகியோரிடம் விசாரணைக்கு வந்தது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பிளாஸ்டிக்குகளுக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு மட்டுமே உரிமை உள்ளது என்று உற்பத்தியாளர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கில் சுற்றுச்சூழல் வனத்துறையையும், மத்திய ரசாயனத்துறையும் எதிர்மனுதாரர்களாக சேர்த்து உத்தரவிட்டனர்.

மேலும் பிளாஸ்டிக் தடை குறித்து இரு துறைகளும் பதிலளிக்குமாறும் உத்தரவிட்டனர். அதன் பின்பு இந்த வழக்கை விசாரித்த கிருஷ்ணன் ராமசாமி மற்றும் சுப்பையா ஆகிய நீதிபதிகள், அறிவியல் ஆய்வின் அடிப்படையில் பிளாஸ்டிக் பொருட்கள் நிலத்தில் மக்க 100 ஆண்டுகள் வரை ஆகும் என்பதாலும், சுற்றுச்சூழலலுக்கு இது பெரும் அச்சுறுத்தல் ஏற்படுத்திவருவதாலும், மறுசுழற்சி செய்ய பிளாஸ்டிக் பொருட்களின் தடை உத்தரவை தமிழக அரசு கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும் ஆவின் பாலை பாக்கெட்டுகளில் விற்பனை செய்வதற்கு பதிலாக, பாட்டிலில் விற்பனை செய்வது போன்ற மாற்று ஏற்பாடுகளை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடுகிறோம் எனவும் உத்தரவிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்