மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ள நிலையில், உபரி நீர் வெளியேற்றப்படுவதால் காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி ஆற்றின் நீர் பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. ஒரு மாதமாக இடைவிடாமல் பெய்து வரும் மழையால் கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் நிரம்பியுள்ளன.
இதனையடுத்து இரு அணைகளில் இருந்தும் தமிழ்நாட்டுக்கு உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் இருந்து திறந்துவிடப்படும் காவிரி நீரால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.
இந்நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 43 வது முறையாக 120 அடியை எட்டியுள்ளது. மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டிய நிலையில், அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாலை 5 மணி நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 60 ஆயிரம் கன அடியாக இருந்தது.