அரசியல் செய்யாமல் கோரிக்கை இருந்தால் சொல்லவும்… விஷாலுக்கு மேயர் பிரியா பதில்!

செவ்வாய், 5 டிசம்பர் 2023 (11:01 IST)
சென்னை பெருமழை காரணமான வெள்ளப் பெருக்கையடுத்து நடிகர் விஷால் வெளியிட்டுள்ள வீடியோ சமூகவலைதளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வீடியோவில் அவர் ”வணக்கம், புயலால் முதலில் மின்சாரம் துண்டிக்கப்படும். பின்பு தண்ணீர் வீட்டுக்குள் வரும் என்பது வாடிக்கையான ஒன்று. அண்ணா நகரில் இருக்கும் என் வீட்டிலேயே ஒரு அடிக்கு தண்ணீர் நுழைந்துவிட்டது. அப்படி என்றால் மிகவும் தாழ்வான பகுதிகளில் எப்படி இருக்கும். 2015 ஆம் ஆண்டு புயலின் போது எல்லோரும் இறங்கி வேலை செய்தோம்.

8 வருஷத்துக்கு அப்புறம் அதைவிட மோசமாக நடப்பது கேள்விக்குறியாக உள்ளது. சென்னை மாநகராட்சி ஆரம்பித்த மழைநீர் வடிகால் திட்டம் என்ன ஆனது? நான் இதை வாக்காளராகதான் இதை கேட்கிறேன். நடிகராக இல்லை.  தயவு செய்து சென்னை தொகுதியின் அனைத்து எம் எல் ஏக்களும் வெளியே வாருங்கள். அதுதான் பொதுமக்களுக்கு நம்பிக்கையை அளிக்கும். எல்லா இடத்திலும் தண்ணீர் தேங்கி இருப்பதை தர்மசங்கடமாகவும் கேவலமாகவும் பார்க்கிறேன்.  எதற்காக வரி கட்டுகிறோம் எனக் கேட்க வைத்து விடாதீர்கள். வந்து உதவுங்கள்” எனப் பேசியிருந்தார்.

இந்நிலையில் நடிகர் விஷாலுக்கு பதிலளிக்கும் விதமாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மேயர் பிரியா “அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் களத்தில் நின்று அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும், மாநகராட்சி ஊழியர்களும் செய்து வருகிறார்கள். அரசியல் செய்ய முயலாமல் கோரிக்கை ஏதேனும் இருந்தால் தெரிவிக்கவும். அரசு நிறைவேற்றித் தரும்!” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்