கொரோனா காரணமாக பழநி முருகன் கோவில் மின் இழுவை ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் கட்டுப்பாடுகளை மீறி தமிழகத்தின் பல பகுதிகளில் வேல் யாத்திரை நடத்தி வரும் பாஜகவினர் பழநியிலும் வேல் யாத்திரை நடத்தினர். அப்போது பழநி முருகன் கோவில்லுக்கு தரிசனத்திற்கு சென்ற எல்.முருகன், அண்ணாமலை ஆகியோருக்காக மின் இழுவை ரயில் பிரத்யேகமாக இயக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் மூலவர் சந்நிதியில் புகைப்படங்கள் எடுக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எல்.முருகன் மூலவர் சந்நிதியில் வழிபட்டதை புகைப்படம் எடுத்து பாஜகவினர் தங்கள் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். இது ஆகம விதிகளுக்கு எதிரானது என கோவில் நிர்வாகம் புகார் அளித்த நிலையில், பாஜக முகப்புத்தக பகுதியில் இருந்து அந்த புகைப்படம் நீக்கப்பட்டது. இந்நிலையில் விதிகளை மீறி செயல்பட்ட பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.